ட்யூலிப் பூ


சிறுவயதிலே நான் முதலில் அறிந்த வெளிநாட்டுப் பூ ட்யூலிப்தான். அதன் அழகோ நிறமோ மணமோ எனக்கு ஒன்றுமே தெரியாது. எங்களுக்கு பாடப் புத்தகமாக The Black Tulip என்ற நாவலை யாரோ ஓர் ஆசிரியர் வைத்துவிட்டார். ஒரு வருடமாக ஆராய்ச்சி செய்து எப்படித்தான் இந்த நாவலை அவர் கண்டுபிடித்தாரோ தெரியாது. ஆங்கிலத்தை முழுமனதோடு வெறுக்க வைத்தது அந்தப் புத்தகம்தான். எல்லா வார்த்தைகளும் தனித்தனியாக தெரிந்த வார்தைகளாக இருக்கும். ஆனால் வசனம் மாத்திரம் விளங்காது.

உலகத்திலே பலவிதமான நிறங்களில் ட்யூலிப் பூக்கள் வந்துவிட்டன. சிவப்பு, மென்சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை என்று பல வர்ணங்கள் இருந்தாலும் கறுப்பு நிற ட்யூலிப்பை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை. ஹொலந்து நாட்டு அரசர் ஒரு போட்டிவைக்கிறார். கறுப்பு ட்யூலிப் பூவைக் கொண்டுவருபவருக்கு ஒரு லட்சம் கில்டர் பணம் பரிசு. ஒருவர் கறுப்பு நிற பூவை உருவாக்கும் ரகஸ்யத்தைக் கண்டுபிடித்து அதை எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். மகனும் அவனுடைய காதலியும் சேர்ந்து கறுப்பு ட்யூலிப்பை உண்டாக்கி பரிசுப் பணத்தை வென்றுவிடுகிறார்கள். இதுதான் கதை. மீதியெல்லாம் மறந்துவிட்டது.

முதன்முதல் நான் வெளிநாட்டுக்கு பயணமானபோது ஹொலந்து நாட்டில் ட்யூலிப் பூக்களைப் பார்த்தேன். நாவலில் சொல்லியிருந்த மாதிரி உலகத்தில் எத்தனை வர்ணங்கள் இருந்தனவோ  அத்தனையிலும் அங்கே பூக்கள் பூத்துக் கிடந்தன. ஹொலந்து தேசம் ட்யூலிப்புகளுக்கு பேர் போனது. வசந்தத்தை வரவேற்கும் பூக்கள் அவைதான். அவை இல்லாவிட்டால் வசந்தமே இல்லை. அத்தனை அழகாக இருக்கும். ஒரு காலத்தில் ஹொலந்தில் ட்யூலிப் பூக்களுக்கு பெருமதிப்பு இருந்தது. அரசர்களும் தனவந்தர்களும் வியாபாரிகளும்  அவற்றை அடித்து பிடித்து வாங்கினார்கள். அது உயர்குடியின் சின்னமாகி அதன் விலை ஏறிக்கொண்டே போனது. ஒரு ட்யூலிப் முளையை காலையில் வாங்கினால் அதன் விலை மாலையில் இரட்டிப்பானது. பலர் ட்யூலிப் முளைகளை தோட்டத்தில் நடாமல் முளையாக விற்றே பணம் சம்பாதித்தார்கள். தங்கத்தை வீட்டிலே பதுக்கி வைப்பதுபோல முளைகளை பதுக்கி வைத்தார்கள்.

ஒருநாள் கப்பல் தலைவன் ஒருவன் துறைமுகச் சந்தையில்  ட்யூலிப் முளையை பார்த்துவிட்டு அதை வெங்காயம் என நினைத்து தூக்கி சாப்பிட்டுவிட்டான்.  பிறகு பார்த்தால் அதன் விலை அவனுடைய கப்பலுக்கு சமானமாக இருந்தது. அவன் அதற்கு ஈடாக தனது கப்பலையே கொடுக்கவேண்டி நேர்ந்தது என்று ஒரு கதையுண்டு. ஆனால் ஒரு நாள் விலைகள் சடாரென்று சரியத் தொடங்கின. பதுக்கி வைத்த செல்வந்தர்களும் வியாபாரிகளும் ஓர் இரவில் ஆண்டியானார்கள். அதுவே உலகத்தின் முதல் குமிழ் வெடிப்பு என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வார்கள்.

நான் கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது ட்யூலிப் வளர்க்கவேண்டும் என்ற ஆசை இயற்கையாக எழுந்தது. எப்படியும் என்னுடைய தோட்டத்தில் விதவிதமான வர்ணங்களில் ட்யூலிப் பூக்களை வளர்ப்பது என்ற முடிவிலிருந்தேன். ஆனால் எப்படி என்பதுதான் தெரியவில்லை. கனடாவில் எப்போ பூக்கன்றுகள் விற்கும் கடைக்குப் போய் ட்யூலிப் என்று கேட்டாலும் அவர்கள் பதில் இல்லை என்றே இருக்கும். ஆனால் நான் பார்த்த எல்லா வீட்டு தோட்டங்களிலும் ட்யூலிப் பூக்கள் பூத்துக் குலுங்கின. இரண்டு வருடங்கள் இப்படி வீணாகக் கழிந்தன. மூன்றாவது வருடம்தான் ரகஸ்யம் பிடிபட்டது. ட்யூலிப் கன்றுகளை வாங்கி நடமுடியாது, ட்யூலிப் முளைகளைத்தான் வாங்கி நடவேண்டும், அப்போதுதான் பூக்குமென்றார்கள். சரி என்று கடைக்கு போனால் அவர்கள் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில்தான் அவற்றை விற்பார்கள் என்பது தெரிந்தது. இப்படியாக இழுபட்டு தவணை முறையில் ட்யூலிப் வளர்ப்பு பற்றிய அறிவு பெற்றேன்.

ஓர் ஒக்டோபர் மாதத்து கடைசியில் முளைகளை வாங்கி தோட்டத்தில்  குழி தோண்டி நட்டேன். கனடாவில் கேக் வாங்கினால் இலவசமாக வாழ்த்து எழுதி தருவார்கள். இரண்டு பக்கட் அரிசி வாங்கினால் ஒரு பக்கட் இலவசம். மடிக் கணினி வாங்கினால் உறை இலவசம். அதுபோல முளை வாங்கியபோது இலவசமான அறிவுரைகள் தந்தார்கள். எத்தனை அடி ஆழத்தில் நடவேண்டும், எவ்வளவு இடைவெளி விடவேண்டும் என்றெல்லாம் சொல்லித் தந்தார்கள். அந்த வருடம் நவம்பரிலேயே பனி பொழியத் தொடங்கிவிட்டது. மிகவும் கடுமையான பனிக்காலம். இரண்டடி, மூன்றடி உயரத்துக்கு தோட்டத்திலே உறைபனி பாளம் பாளமாக வளர்ந்தது. முளைகள் அத்தனை பனிக்கு கீழே புதைந்துபோய் கிடந்தன. ட்யூலிப்பை பற்றி மறந்துபோனேன். ஏப்ரல் மாதம் புதுவருட நாள் காலையில் பூமியை பிளந்து வெளியே வந்து பூக்கள் வெடித்தன. நான் கனவு கண்ட அத்தனை பூக்களும் அங்கே காற்றில் ஆடின. மஞ்சள், சிவப்பு, மென்சிவப்பு, ரத்தச் சிவப்பு, வெள்ளை, ஊதா என்று அவை வசந்தத்தை வரவேற்றன. இதனிலும் சிறந்த பூக்கள் உலகத்தில் இல்லை என்று என்னை எண்ண வைத்தன.

இந்த வருடமும் நான் ஒக்டோபரில் ஊதா, மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என்று பல நிறங்கள் தரும் முளைகளை வாங்கினேன். விற்பனைப் பெண் அவற்றை நடுவதற்கு மாதக் கடைசிதான் நல்ல சமயம் என்று சொன்னார். 'நீண்ட பனிக்காலம் பாதகம் இல்லையா?' என்று மீண்டும் கேட்டு வைத்தேன். 'எவ்வளவு காலம் பனியில் புதையுண்டு கிடக்கிறதோ அவ்வளவுக்கு நல்லது.  நிலத்தின் கீழேயிருக்கும்போது அது சும்மா இருப்பதில்லை. தன் சக்தியை சேகரித்துக்கொண்டே இருக்கும். சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும்' என்றார்.

           *                        *                         *

ஹேர்மன் மெல்வில் என்பவர் மோபிடிக் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதினார். அந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் மோபிடிக் என்று அழைக்கப்படும் ஒரு திமிங்கிலம்தான். 700 பக்கம் கொண்ட  நாவலில் முதல் 500 பக்கங்களுக்கு மோபிடிக் தோன்றுவதேயில்லை. அவ்வளவு நேரமும் வாசகர்கள் பொறுமையோடு படிக்கவேண்டியதுதான்.  இதே மாதிரித்தான் சிலப்பதிகாரத்திலும். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதி முடிந்த பிறகுதான் கண்ணகி என்ற பாத்திரம் உயிர்பெறுகிறது.

கண்ணகியின் தோழி தேவந்தி 'வா, கோயிலில் போய் நீராடி வேண்டலாம்' என்று கேட்டபோது கண்ணகி ஒரு சொல்லில் 'பீடன்று' என்று கூறி மறுக்கிறாள். கோவலன் மாதவியிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் வந்தபோதுகூட கண்ணகி மூன்று வார்த்தைகளை உதிர்த்தாள். 'சிலம்புகள் உள்ளன, எடுங்கள்.' அடுத்து அவள் கோவலனிடம் பேசியது 'மதுரை வந்துவிட்டதா?' பின்னர் கோவலனுக்கு உணவு படைத்தபோது 'சாப்பிடுங்கள்' என்றாள். அவர்கள் கடைசியாக ஒன்றாய் இருந்த இரவு மாத்திரம் சில வரிகள் பேசினாள். அதிலேதான் 'போற்றா ஒழுக்கம் புரிந்தீர்' என்ற புகழ்பெற்ற வரி வருகிறது.

இப்படி அடக்கமானவளாக, ஒன்றும் பேசாத மௌனியாக, வெகுளியாக கண்ணகி சித்தரிக்கப்படுகிறாள். நாடு காண் காதையில் ஒரு சின்னக் கோடி காட்டப்படுகிறது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு போவதற்கு புறப்பட்டு புகார் நகரத்து கோட்டையையும் அகழியையும் கடந்ததும் கண்ணகி ஆவலோடு கேட்கிறாள் 'மதுரை வந்துவிட்டதா?' என்று. கோவலன் சிரித்தவாறு 'இன்னும் தூரமிருக்கிறது' என்று கூறுவான். அப்படிப்பட்ட வெகுளி கண்ணகி. உலகம் தெரியாதவள்.

கோவலன் அநியாயமாக கொலையுண்டதை கேள்வியுற்றதும் கண்ணகி வெகுண்டு எழுகிறாள். 'என் கணவன் எங்கே?' என ஆயர் குலப் பெண்களிடம் கேட்கிறாள். சூரியனிடம் கேட்கிறாள். கோவலனின் இறந்த உடலைக் கட்டி புலம்புகிறாள். 'பெண்டிரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?' என ஆற்றாமல் அழுகிறாள். அரண்மனைக்கு சென்று 'வாயிலோயே, வாயிலோயே' என்று கூவி தன் வருகையை அரசனுக்கு அறிவிக்கச்சொல்லி ஆணையிடுகிறாள். அரசனிடம் நீதி கேட்டு, தேர்ந்த வழக்கறிஞரைப்போல வழக்காடி வெல்கிறாள். இதுவெல்லாம் எப்படி நடந்தது? திடீரென்று இவ்வளவு ஆற்றலும் அறிவும் ஆவேசமும் அவளுக்குள் எங்கிருந்து வந்தது? 

            *                        *                         *
தமிழில் நான் மிக மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன். அறுபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து எழுதிவருபவர். இவர் 500 வரிகளில் ஒரு கட்டுரையை எழுதிவிட்டு ஒன்றுவிட்டஒரு வரிகளை வெட்டிவிடுவார் என நினைக்கிறேன். அவ்வளவு இறுக்கமாகவும் கச்சிதமாகவும் அவர் எழுத்து இருக்கும். பல விசயங்களை நீங்களே இட்டு நிரப்பி வாசிக்கவேண்டும். ஒரு தேவையில்லாத சொல் இராது. இவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் தலைப்பு 'விடுதலைக்கு இன்னும் சில நாட்கள்.' கட்டுரையை மிகவும் ரசித்து வாசித்தேன்.

அசோகமித்திரன் தன் சிறுவயதுச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947, ஆகஸ்டு 15ம் தேதியன்று. அசோகமித்திரனின் தகப்பனாருக்கு நிஜாம் ரயில்வே நிறுவனத்தில் வேலை. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது நிஜாம் சமஸ்தானம் இந்தியாவுடன் சேரவில்லை. அது தனி சமஸ்தானமாக இயங்கியது. 1948 செப்டம்பர் மாதம் அசோகமித்திரனின் தகப்பனார், குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருந்தவர், திரும்பவும்  நிஜாம் சமஸ்தானத்துக்குள் நுழையமுடியாமல் அவதிப்பட்டார். ரயில்கள் ஓடவில்லை. அவர் செப்டம்பர் முதல் தேதியே உத்தியோகத்துக்கு திரும்பியிருக்கவேண்டும். அப்படி திரும்பாவிட்டால் வேலை போய்விடும். ஒரு வாரம் கழிந்த நிலையில் ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கின. அசோகமித்திரனின் குடும்பம் எப்படியோ ரயிலில் இடம்பிடித்து மூட்டை முடிச்சுக்களுடன் நிஜாம் சமஸ்தானத்துக்குள் நுழைந்து தங்கள் வீட்டை அடைந்துவிடுகிறார்கள். நிஜாம் ராணுவம் இவர்களை அணுஅணுவாக சோதனை செய்தபிறகுதான் அனுமதிக்கிறது. செப்டம்பர் 13ம் தேதி இந்திய ராணுவம் நிஜாம் எல்லைக்குள் முன்னேறத் தொடங்க, 18ம் தேதி நிஜாம் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்துகொண்டது. கட்டுரை இப்படி முடிகிறது. '1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியாவின் ஏனைய பகுதிகளில் நடைமுறைக்கு வந்த இந்திய சுதந்திரம் பதின்மூன்று மாதங்கள் கழித்து நிஜாம் சமஸ்தானத்துக்கு வந்தது.'

ஒரு நாட்டின் சரித்திர முக்கிய நிகழ்வையும் ஒரு குடும்பத்தின் அவலத்தையும் ஒரே சமயத்தில் மிகை இல்லாமல் சொன்ன கட்டுரை. கட்டுரையை படித்த உடனே நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'உங்கள் தகப்பனாருக்கு என்ன நடந்தது? வேலை திரும்ப கிடைத்ததா? நிஜாம் ரயில்வே நிறுவனம் என்னவானது?' பதில் வந்தது. 'என் தகப்பனார் நாலு மாதத்திற்குள் இறந்துபோனார். நிஜாம் ரயில்வே நிறுவனம் இந்திய ரயில்வேயுடன் இணைந்தது.' இரண்டு வரியில் பதிலும் சுருக்கமாகத்தான் இருந்தது.

நான் விடவில்லை. தொடர்ந்து எழுதினேன். 'இந்த முக்கியமான சம்பவம் நடந்து சரியாக 50 வருடங்களுக்கு பின்னர் இதைக் கட்டுரையாக எழுதியிருக்கிறீர்கள். இவ்வளவு நாளும் ஏன் எழுதவில்லை?' ஓர் எழுத்தாளரிடம் இன்னொரு எழுத்தாளர் கேட்கக்கூடாத கேள்வி. வேதனையின் பாரம் அதைக் கீழே வைத்திருந்தது. இப்பொழுது திடீரென்று உடைத்துக்கொண்டு மேலே வந்திருக்கிறது.

             *                       *                          *
ட்யூலிப் விற்பனைப்பெண் சொன்னது நினைவுக்கு வந்தது.  ட்யூலிப் முளை சக்தியை மௌனமாக சேகரித்துக்கொண்டே இருக்கும். சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும். கண்ணகி அதைத்தான் செய்தார். அசோகமித்திரனும் அதைத்தான் செய்தார். ட்யூலிப் பூவுக்கு ஐந்து மாதம், அசோகமித்திரனுக்கு 50 வருடம்.

அது அதற்கு ஒரு காலம் இருக்கிறது. நேரம் கூடவேண்டும்.

END

   

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta