இன்றைக்கு அனுப்புகிறேன்

2010ம் ஆண்டு பிறந்த சில வாரங்களில் ரொறொன்ரோவில் எல்லோரும் பேசினார்கள், பனிக்காலம் முடிந்துவிட்டது என்று. பிறகு பார்த்தால் மறுபடியும் பனி பொழிந்தது. அது முடிந்த கையோடு வெய்யில் எறித்தது. சரி பனிப் பருவம் தாண்டிவிட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் பனி போவதாக தெரியவில்லை. மறுபடியும் பெய்தது. காலநிலை அறிவிப்பாளரிடம் அது விளையாடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெண் நம்பிக்கையாகச் சொல்வார். ‘இன்று பனிப்பொழிவு 40 வீதம் வாய்ப்பு’ என்று. எப்படி உடையணிவது? உங்கள் மேலங்கியை 40 வீதம் வெட்டிவிட்டு அணியவேண்டுமா?

காலநிலை இப்படி முடிவெடுக்க முடியாமல் ஆடிக்கொண்டிருந்த ஒருநாள் முன்மதியத்தில் நான் வெளியே புறப்பட்டேன். நான் வீடு திரும்ப முன்னர், இரண்டு பெண்களின் தொந்திரவுக்கு அன்று நான் ஆளாவேன் என்பது எனக்கு அப்போது தெரியாது. காலநிலை அருமையாக இருக்கும் என்று டிவிப் பெண் கூறியிருந்தார். அலுவலகத்துக்கு போகிறவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். ரோட்டிலே கார்கள் குறைவு. நான்  எனக்கென்று போட்டுவிட்ட சாலையில் என் பாட்டுக்கு காரை ஓட்டிக்கொண்டு போனேன். அடுத்த நாள் வெளிநாட்டுக்கு பயணம் ஆகவே சில அலுவல்களை முடிக்கவேண்டி இருந்தது.

நான் எப்பொழுது வெளியே வருவேன் என்று காத்துக் கொண்டிருந்ததுபோல ஆகாயம் சின்ன பனித் தூறலை  அனுப்பியது. ஒவ்வொரு சிவப்பு விளக்காக நின்று நின்று நான் ஆமை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தேன். ரோட்டிலே ஆட்கள் இல்லை. கார்கள் இல்லை. நானும் பனித்தூறலும் மட்டுமே.  ரேடியோவில் ‘தென்றல் வந்து என்னைத் தொடும் ஆ ஆ’ என்ற பாடலை ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தார். இலங்கையில் உற்பத்தியாகி, கனடாவில் பிறந்த பின்னர் அவர் தமிழையும் இசையையும் கற்றுக்கொண்டவர் என்பது உடனேயே தெரிந்தது. எப்படி தெரிந்தது என்றால் ‘தென்ளல், தென்ளல்’ என்று விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார். நான் அப்போது ஒரு சிவப்பு விளக்கில் காரை நிற்பாட்டிவிட்டு ரேடியோவை நிறுத்துவதா அல்லது இந்தப் பெண்ணின் தொந்திரவை தொடர்ந்து அனுபவிப்பதா என்பதை எனக்குள் விவாதித்துக் கொண்டிருந்தேன்.

அந்தச் சிந்தனையே சரியில்லை என்பதுபோல  காரை படார் என்ற சத்தத்துடன் பின்னுக்கிருந்து யாரோ இடித்தார்கள். இப்பொழுதுதான் அப்படி எழுதுகிறேன், ஆனால் அந்தச் சமயம் குண்டு வெடித்ததுபோல பெருஞ்சத்தமாக எனக்கு கேட்டது. என்ன நடந்தது என்றே புரியவில்லை. என் பிடரி, ஆசனத்தின் பின்பகுதியில் போய் இடித்தது.  இன்னும் வேகமாக அடித்திருந்தால் காற்றுப்பை திறந்து வெளியே வந்து என்னை அமுக்கியிருக்குமோ தெரியாது. இது ஒன்றையும் அறியாமல் ரேடியோப் பெண் ‘தெரிந்த பிற குதிரைகள்’ என்று பாடிக்கொண்டிருந்தார். அந்த அவலமான நேரத்திலும்கூட இந்தப் பாடலில் ’குதிரைகள்’ வராதே என்று என் மனது உறுத்தியது நினைவுக்கு வந்தது. ( வீட்டுக்கு வந்து நிதானம் அடைந்த பின்னர் ரேடியோப் பெண் ‘தெரிந்த பிறகு திரைகள் எதற்கு’ என்ற வரியைத்தான் ‘தெரிந்த பிற குதிரைகள்’ என்று பாடியிருக்கிறார் என்பது புலனானது)   

நான் கதவை திறந்து கீழே இறங்கினேன். நாலு வீதி சாலை வெறிச்சென்று கிடந்தது. கார் ஓட்டிவந்த பெண் இத்தனை வீதிகள் சும்மா கிடக்க எனக்கு பின்னுக்கு வந்து, நிறுத்திநின்ற காரை இடித்துவிட்டாரே என்று நினைத்தபோது என்னால் நம்பமுடியவில்லை. பாட்டைக் கேட்டது தவிர நான் வேறு ஒரு குற்றமும் செய்யவில்லை. காரின் பின்னுக்கு சென்று சேதத்தை ஆராய்ந்தேன். விலங்கு ஒன்று வாயை திறந்ததுபோல அது பிளந்துபோய் கிடந்தது. பெரிய சேதம் என்று இல்லை. ஒரு மணி நேரத்துக்குள் திருத்திவிடலாம் என்று பட்டது.

சாரதிப் பெண் தன் கார் கதவை தள்ளித் திறந்து இறங்கி காலிலே விழப்போவதுபோல குனிந்தபடி ஓடிவந்தார். ‘மன்னிக்கவேண்டும், மன்னிக்கவேண்டும்’ என்று நாலு தடவை சொன்னார். என் காரை வணங்குவதுபோல வளைந்து சேதத்தை ஆராய்ந்தார். ‘நான் ஏன் இப்படி வந்து இடித்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. இந்த பனிப்பொழிவு காரணமாக இருக்கலாம். நான் பிரேக் போட்டேன், அப்படியும் சறுக்கிக்கொண்டு வந்துவிட்டது. மன்னியுங்கள். மன்னியுங்கள்’ என்று திருப்பி திருப்பி புலம்பியபடி இருந்தார். மூச்சு பாதி பாதியாக வந்தது. இப்பொழுதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி எழுந்து நிற்பதுபோல அவர் கால்கள் நடுங்கின. கைகள் நடுங்கின. உதடுகள் துடித்தன.

நான் அவரை முழுதாகப் பார்த்தேன். பழசான யானைத் தந்தம்போன்ற நிறம். வயது 22, 23, 24 க்குள் இருக்கும். தண்ணீரில் மிதப்பதுபோல வட்டமான பெரிய விழிகள். தோளைத் தொட்டு அசையும் கறுப்பு முடி. ஒன்றிரண்டு பனித்துகள்கள் பூப்போல தலையிலேயே தங்கிவிட்டன. இந்தியப் பெண்ணாக இருக்கலாம். பார்ப்பதற்கு நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்போல, விலை உயர்ந்த ஆடைகளில் காணப்பட்டார். மெல்லிய பட்டுத்துணி போன்ற ஸ்கார்ஃபினால் கழுத்தை நாலுதரம் சுற்றியிருந்தார்.  ஏதோ முக்கியமான அதிகாரியுடனான ஒரு  சந்திப்புக்கு அவசரமாக போய்க்கொண்டிருக்கிறார் என ஊகிக்க வைத்தது.

‘என்ன செய்யலாம்? பொலீஸுக்கு அறிவிக்கலாமா?’ என்று கேட்டேன். ‘வேண்டாம். தயவுசெய்து வேண்டாம். இது என்னுடைய பிழை. எவ்வளவு சேதமோ, அந்தக் காசை நான் தந்துவிடுகிறேன்’ என்றார். அவர் முகம் அழுவதற்கு தயாராகிக்கொண்டு வந்தது. நான் கேட்காமலே தன்னுடைய சிவப்பு நிற, இரண்டு கதவு BMW 335xi காரை திறந்து அவருடைய லைசென்ஸை எடுத்து தந்தார். ஒரு பேப்பரில் விவரங்களை அவரையே குறித்து தரச் சொன்னேன்.  தன்னுடைய பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அத்துடன் லைசென்ஸ் நம்பர் போன்ற தகவல்களை எழுதினார். எழுத எழுத கைநடுக்கம் அதிகரித்தது. பாதியில் நான் பேப்பரை வாங்கி மீதியை எழுதி முடித்தேன். அவர் பெயர் மித்ரா ஜெட்வா என்றார். பஞ்சாபியாகவோ குஜராத்தியாகவோ இருக்கலாம்.

பச்சை  விழுந்து மறுபடியும் சிவப்புக்கு மாறிவிட்டது. ஒன்றிரண்டு கார்கள் சேர்ந்துவிட்டன. கைகளைப் பிசைந்தபடி பாவமாக நின்ற அவரை நான்  தேற்றவேண்டி நேர்ந்தது. அடுத்து என்னவோ நடப்பதற்கு குனிந்தபடி காத்து நின்றார். ‘இப்பவே கார் திருத்தும் இடத்துக்கு போகிறேன். அவர்கள் சொல்லும் பணத்தை நீங்கள் தந்தால் போதும்’ என்று சொன்னேன். அவர் மறுபடியும், ‘நிச்சயமாகச் செய்வேன். நன்றி’ என்று பலதடவை உறுதி கூறிவிட்டு காரில் ஏறினார். சரிந்த தலைமுடியை கையால் தொட்டுக்கொண்டு, குனிந்து கால்களை மடித்து, ஒரே அசைவில் காருக்குள் ஏறி அமர்ந்தார். அந்த அசைவுச் சிக்கனம் ஒரு கவிதைபோல படிமமாக என் மனதில் தங்கிவிட்டது.   அங்கே நின்ற அத்தனை நிமிடங்களிலும் அவர் ஒருதடவைகூட தன் காரில் என்ன சேதம் என்பதை குனிந்து பார்க்கவில்லை என்பது எனக்கு இன்னொரு ஆச்சரியம்.   

வெளிநாடு பயணம் புறப்படுவதற்கு முன்னர் நான் மித்ராவை டெலிபோனில் அழைத்து கார் திருத்தக்காரர்  நூறு டொலர் சேதம் என்று சொன்னதை தெரிவித்தேன். அவர் ’அப்படியா? பிரச்சினை இல்லை’ என்றார். அவர் கார் ஓட்டிக்கொண்டிருப்பதால்  முகவரியை மின்னஞ்சல் செய்யச் சொன்னார். நான் சரி என்றேன். ’உங்கள் முகவரிக்கு இன்றே காசை அனுப்பிவிடுகிறேன்’ என உறுதியாக மீண்டும் சொன்னார். அன்று இரவு நான் விமானத்தில் புறப்பட்டேன்.

ஒரு மாதம் கழித்து வீடு திரும்பியபோது  கடிதங்களும், மாத இதழ்களும், வார இதழ்களும், விளம்பரத் துண்டுகளும் நிறைய சேர்ந்துவிட்டன. அவற்றை பார்வையிட்டுக்கொண்டு வந்தபோது மித்ராவின் ஞாபகம் வந்தது. அவரிடம் இருந்து வரவேண்டிய காசோலை வரவில்லை. ஆச்சரியமாகவிருந்தது. இரண்டு நாள் கழித்து அவரை தொலைபேசியில் அழைத்தேன். ஒரு காதலனுக்கோ அல்லது ஒரு குழந்தைக்கோ பாவிக்கும் குழைவான குரலில் ‘மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள்’ என்றார். மித்ரா என்ற பெண் இந்த வார்த்தையின் முழு உபயோகத்தையும் பிழிந்து எடுத்துவிடுவார் என்றே எனக்குப் பட்டது. ‘இன்றே அனுப்புகிறேன்’ என்றார். முகவரி தேவையா?’ எனக் கேட்டேன். அதையும் மறந்துவிட நல்ல வாய்ப்பு இருந்தது. ‘இல்லை, இல்லை. உங்கள் மின்னஞ்சல் இருக்கிறது’ என்றார்.

மறுபடியும் ஒரு மாதம் கழிந்தது. பெண்ணிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. தொலைபேசியில் அழைத்தபோது, என் பெயரைக்கூட நான் சொல்லமுன்னர், ‘இன்றே அனுப்பிவிடுகிறேன்’ என்றார். ‘என்ன நடந்தது?’ என கரிசனையுடன் விசாரித்தேன். ‘பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன், நேரம் கிடைக்கவில்லை’ என்றார். ‘பரீட்சையா?’ ‘முதுகலைக்கான ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி’ என்றார். ’நீங்கள் மாணவியா? அப்படியென்றால் உங்களுக்கு 50 வீதம் கழிவு உண்டு. நீங்கள் ஐம்பது டொலர் காசு அனுப்பினாலே போதுமானது’ என்றேன். அவர் நன்றி என்று கூறிவிட்டு போனை வைத்தார்.

மேலும் ஒரு மாதம் ஓடியது. மின்னஞ்சல் அனுப்பினேன், பதில் ஏதும் இல்லை. சனிக்கிரகத்தைச் சுற்றி 62 சந்திரன்கள் சுழலுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவரிடமிருந்து காசை கிளப்பமுன்னர் விஞ்ஞானிகள் 63வது சந்திரனையும் கண்டுபிடித்து விடுவார்கள்போல பட்டது. அவர் பெரும் புதிராக அல்லவா மாறிக்கொண்டு வந்தார். தரவேண்டிய 50 டொலரை அறவாக்க வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இந்தப் பெண் என்னை எங்கே இட்டுப்போகிறார் என்பதை முற்றிலும் பார்த்துவிடவேண்டும் என முடிவு செய்தேன். தொலைபேசியில் அழைத்தேன். ’இன்றே அனுப்பிவிடுவேன்’ என்று சொல்வார் என நினைத்தேன். மாறாக ‘அனுப்பிவிட்டேனே’ என்றார். ‘எப்போது?’ என்றேன் திடுக்கிட்டுப்போய். ‘இரண்டு வாரத்துக்கு முன்னர்.’ உடனேயே எனக்கு அது முழுப்பொய் என்பது தெரிந்துவிட்டது. ரொறொன்ரோவில் கடிதம் வந்துசேர ஒருநாள்தான் எடுக்கும். ’நீங்கள் அனுப்பிய காசோலையை செல்லாததாக்கிவிட்டு இன்னொன்று அனுப்புங்கள்’ என்று சொன்னேன். உடனேயே சரி என்றார். டெலிபோனை வைக்கும்போது அவர் அனுப்பமாட்டார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்துபோனது.

இப்படி ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. அதற்கு பிறகு ஒரேயொரு முறைதான் அவரை அழைத்தேன். என்ன பதில் சொல்வார் என்று கேட்பதில் எனக்கு நிரம்ப ஆர்வம் இருந்ததால் அதைச் செய்தேன். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. அவருடைய குரல்தான் வந்தது. ‘நான் குறுக்கெழுத்து புதிரை நிரப்பிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது வரமுடியாது. உங்கள் தகவலை விடுங்கள். நான் அழைப்பேன்’ என்று சொன்னது. அப்படியே செய்தேன், அவர் அழைக்கவே இல்லை. நான் எரிச்சலில் செல்பேசியில் சேமிக்கப்பட்ட  அவருடைய நம்பரை அழித்தேன். எனக்கு பெரும் ஆச்சரியமூட்டியது அவருடைய நடத்தைதான். அத்தனை பொய்களும், அந்த நடிப்பும் வெறும் ஐம்பது டொலருக்காகவா? அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடைகள், ஓட்டி வந்த கார், கண்கலங்கிப்போய் குனிந்தபடி நின்ற காட்சி எல்லாம் மனதில் திரும்ப திரும்ப ஓடின.

அவர் வசதியான குடும்பத்தில் இருந்து வந்திருந்தார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. நிச்சயமாக அவர்கள் வீட்டில் உணவை மணந்து பார்த்து பழுதாகவில்லை என்று உறுதிப்படுத்தியபின்னர் அவர்கள் உண்பதில்லை. பழைய நாள்காட்டியில் புதுத் தேதியை எழுதி வைத்து  அவர்கள் பாவிப்பதில்லை. பனிக்காலம் தொடங்க முன்னர் கம்பளிப் போர்வைகளை தடியினால் அடித்து தூசு தட்டி தயாராகவைத்து பின்னர் போர்த்துவதில்லை. கழிவறைக்கு செல்லமுன்னர் நடுக்கூடத்தில் நின்று பொது அறிவிப்பு செய்துவிட்டு போவதில்லை. ஐம்பது டொலர் காசை ஏமாற்றுவதற்கு ஒரு பெண் இத்தனை தூரம் போவாரா?

’அன்புள்ள மித்ரா ஜெட்வாவுக்கு,

நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் தரவேண்டிய 50 டொலரைக் கேட்டு பல தடவை நான் அழைத்தேன். மின்னஞ்சலும் எழுதினேன். உங்களுக்கு காசை தரவிருப்பமில்லை என்பது உறுதியாகிவிட்டது. உண்மையில் விபத்து நடந்து, நீங்கள் விடைபெற்று சென்ற அந்தக் கணமே பணத்தை தரக்கூடாது என்பதை  முடிவுசெய்துவிட்டீர்கள். அது இப்போது எனக்கு தெரிகிறது. ஐம்பது டொலர் உங்களுக்கு பெரிய காசில்லை என்பது எனக்கு தெரியும். எனக்கும் அது பெரிய காசில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். விபத்துக்கான பணத்தை நீங்கள் கொடுத்த திருப்தி உங்களுக்கு கிடைக்கட்டும் என நான் நினைத்தேன்.

நீங்கள் பரீட்சையில் வெற்றியடைந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மிகவும் மதிப்பான, பொறுப்பான வேலை ஒன்று கிடைக்கும். உங்களைப் போலவே அழகான, புத்திசாலியான வாலிபர் ஒருவரை நீங்கள் காதலித்து மணந்துகொள்வீர்கள். பார்த்தவுடன் பிரமிக்கவைக்கும் புதுவீட்டில் இருவரும் குடிபுகுவீர்கள். உங்களுக்கு நாலு பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்களும் குறைவறப் படித்து உயர்தரமான வேலையில் சேர்ந்து உரிய வயதில் மணமுடிப்பார்கள். உங்களுக்கு 11 பேரப்பிள்ளைகள் பிறப்பார்கள்.

ஒருநாள் 11 பேரப்பிள்ளைகளும் உங்களைச் சுற்றி உட்கார நீங்கள் அவர்களுக்கு கதைகள் கூறுவீர்கள். அவர்கள் உங்கள் இளமைக்கால அனுபவங்களைக் கேட்க நீங்கள் மாறாத இனிமையான குரலில் அவற்றையெல்லாம் நினைத்து நினைத்து சுவாரஸ்யமாகச் சொல்வீர்கள். அப்பொழுது 50 டொலர் காசுக்காக ஒருவரை இழுத்தடித்து ஏமாற்றியதும், வாக்குத் தவறியதும் நினைவுக்கு வந்து மெல்லச் சிரிப்பீர்கள். பேரப்பிள்ளைகள் ’என்ன? என்ன?’ என்று கேட்பார்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக 50 டொலர் ஏமாற்றிய கதையையும் அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் கடந்த காலத்தில் நடந்த ஒன்றை நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இனி மாற்றமுடியாது, அல்லவா?

இப்படிக்கு

ஒரு பனிக்காலத்து விபத்தில் சந்தித்துக்கொண்ட நண்பர்.’

 

இதுதான் கடிதம். இதை என்னுடைய கம்புயூட்டரில் சேமித்து வைத்திருக்கிறேன். அந்தப் பெண்ணின் வயது என்ன? அவரைப்போல மூன்று மடங்கு வயது எனக்கு. இந்த வயதில் ஒருவர் எழுதவேண்டிய கடிதமா இது?

நான் அதை அனுப்பவில்லை.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta