நினைத்தபோது நீ வரவேண்டும்

அதிகாலை ஐந்து மணிக்கு டெலிபோன் அடித்தது. அழைத்தவர் ரொறொன்ரோ பல்கலைக் கழகம் ஒன்றில் கடமையாற்றும் இயற்பியல் பேராசிரியர். பெயரை செல்வேந்திரன் என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம். அவரிடம் ‘என்ன?’ என்று கேட்டேன். ’நினைத்தபோது நீ வரவேண்டும்’ பாடலைப் பாடியவர் டி. எம். சௌந்தரராஜன் என்பது தெரியும். பாடலை எழுதியவர் யார்?’ என்றார். இதனிலும் பார்க்க முக்கியமான கேள்வியை காலை ஐந்து மணிக்கு வேறு எவரும் எழுப்பியிருக்க முடியாது. அடுத்து ‘அது என்ன ராகம்?’ என்ற வினா கிளம்பும் என்பது என் ஊகம். இயற்பியல் பேராசிரியருக்கும் இந்தப் பாடலுக்கும் என்ன சம்பந்தம்? இப்படியான கேள்விகள் என்னிடம் வரும்போது நான் கூகிளில்  தேடி நேரத்தை விரயம் செய்வதில்லை. பேராசிரியர் ஏற்கனவே அதைச் செய்திருப்பார். இசை சம்பந்தமான என்ன கேள்வி எழும்பினாலும் அதை மனநல மருத்துவர் ராமானுஜம் பக்கம் திருப்பிவிடுவேன். அவர் எப்படியோ விடை கண்டுபிடித்து சொல்வார். பாடலை எழுதியவர் பெயர் என்.எஸ்.சிதம்பரம்; ராகம் ஆரபி.

 

இயற்பியல் மாணவர்கள் பேராசிரியருக்கு ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கிறார்கள். சொந்தமாக ஒருவர் வீடு வைத்திருப்பதுபோல, சொந்தமாக ஒருவர் கார் வைத்திருப்பதுபோல பேராசிரியர் சொந்தமாக புவியீர்ப்பு வைத்திருக்கிறார் என கேலி செய்வார்கள். எடை அவரை ஒன்றும் செய்வதில்லை. மெலிந்த உயரமான உருவம். இரண்டு காதுகளுக்கு மேலே மிஞ்சியிருக்கும் முடி சின்னக் காற்றுக்கும் நடுங்கும். பனியோ வெய்யிலோ மணிக்கட்டை தாண்டி விரல்கள்வரை நீண்ட நீளக்கை சட்டை அணிந்திருப்பார். இறகு காற்றிலே மிதப்பதுபோல தரையில் கால் பாவாது. அவசரமாகப் போகும்போது இரண்டு கைகளும் பின்னுக்கு நீண்டிருக்க தரையிறங்கும் பெலிக்கன் பறவைபோல அவர் மிதந்துகொண்டு செல்வார்.

 

செல்வேந்திரன் தற்செயலாக இயற்பியல் பேராசிரியர் ஆனவர். அவர் மூளையிலே இயற்பியல் சூத்திரங்களும், தேற்றங்களும் நிறைந்திருக்காது, மாறாக அங்கே இசைதான் நிரம்பியிருக்கும். ஓய்வான ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் இசையிலே செலவழித்தார். கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் வெளியான இசைத்தட்டுகளையும், ஒலி நாடாக்களையும் ஒரு காலத்தில் தீவிரமாக சேகரித்தார். அவை எல்லாம் இப்போது பிரயோசனப்படாது என்பதால் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணியமாக மாற்றி குறுந்தகடுகளாக சேமித்து வைத்திருக்கிறார். தற்போது அவரிடம் நாலாயிரத்துக்கும் அதிகமான குறுந்தகடுகள் சேகரமாகிவிட்டன. நிறைய தமிழ் சினிமாக்கள் வருடம் தோறும் வருவதால் அவருக்கு வேலை கூடிவிட்டாலும் பாடல்களை சோர்வில்லாமல் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து குறுந்தகடுகளாக எரித்து வைத்துக்கொள்கிறார். பாடல்களுக்கு குறிப்புகளும் இருக்கும். பாடல் இடம் பெற்ற சினிமா, அதை பாடியவர், எழுதியவர், இசையமைத்தவர், ராகம் போன்ற விவரங்கள். ஒரு பாடலை  கேட்க அவரிடம் விருப்பம் தெரிவித்தால் தலைமை நூலகர்போல நிமிடத்தில் அதை தேடிப்பிடித்து போட்டுக் காண்பிப்பார்.  இப்பொழுதெல்லாம் பாடல்கள் இலகுவாக இணையத்தில் கிடைத்துவிடுகின்றன. ஆனால் அவர் சேகரித்தது தேடல் யந்திரங்கள்  வருவதற்கு முன்னர்.  ’நினைத்தபோது நீ வரவேண்டும்’ பாடல் அவருக்கு சமீபத்தில் கிடைத்ததாக இருக்கவேண்டும். அதுதான் அந்த அதிகாலை தொலைபேசி அழைப்புக்கான காரணம்.

 

அத்தனை ஆயிரம் பாடல்கள் இருந்தாலும் ஞானசௌந்தரியில் வரும் ஜிக்கி பாடிய ’எனையாளும் மேரி மாதா’ இருக்கிறதா என்று கேட்டால் உடனேயே இல்லை என்பார். கொஞ்சம் இருங்கள் தேடிப்பார்க்கிறேன் என்று சொல்ல மாட்டார். அவ்வளவு நிச்சயம். எஸ்.ஜி.கிட்டப்பா பாடிய ‘தசரத ராஜகுமாரா’ பாடல் இருக்கிறதா என்று கேட்டால் உடனே இருக்கிறது என்று சொல்லி குறுந்தகட்டை எடுத்துக் காட்டுவார். அந்தக் காலத்து டி.ஆர் .மகாலிங்கம் பாடிய ’பாட்டு வேணுமா’ பாட்டில் இருந்து வானம் படத்தில் வரும் ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ வரை சேகரித்து வைத்திருக்கிறார். ஒருமுறை யாரோ எம்.எம்.தண்டபாணி தேசிகர் நந்தனார் படத்தில் பாடிய ’ஐயே மெத்தக் கடினம்’ பாடலைக் கேட்டபோது இரண்டு மூன்றுமாதமாக இணையத்தில் அலைந்து தேடி எப்படியோ கண்டுபிடித்து நகல் எடுத்துவிட்டார்.

 

இசைதான் அவருடைய உயிர் என்று நினைத்திருந்த எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் ஓர் அதிர்ச்சி கிடைத்தது. அவருடைய வாழ்நாள் ஆசை என்ன தெரியுமா? என ஒருமுறை என்னிடம் கேட்டார். எனக்கு எப்படித் தெரியும்? சொன்னால்தானே தெரியும். ஏ.ஆர். ரஹ்மானுடன் சுற்றுலா போவதாக இருக்கலாம். இளையராஜாவுடன் காலை உணவு சாப்பிடுவதாக இருக்கலாம். யார் கண்டது? அவர் சொன்ன பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ‘எப்படியும் ஒரு தமிழ் சினிமாவில் நடிப்பது’ என்றார். இந்த ஆசை எப்போது பிறந்தது எனக் கேட்டேன். தன்னுடைய ஆசை ஆகச் சின்னவயதிலேயே தொடங்கிவிட்டதாகக் கூறினார். அவர் எங்கேயாவது, எப்போதாவது நடித்திருக்கிறாரா எனக் கேட்டபோது தன் சின்ன வயதில் பள்ளிக்கூட நாடகம் ஒன்றில் தான் நடித்திருப்பதாகவும் அப்போதுதான் இந்தச் சிந்தனை தோன்றியதாகவும் கூறினார். 

 

பள்ளிக்கூடத்தில் நடித்தது என்ன நாடகம் என்ற கேள்விக்கு அரிச்சந்திரன் நாடகத்தில்  லோகிதாசன் வேடம் என்று பதில் கூறினார். அப்பொழுது அவருக்கு வயது 10. அட்டையினால் செய்த பாம்பு கொத்த அவர் காட்டுக்குள் செத்துப்போய்க் கிடந்திருக்கிறார். மேடையில் உயிரோடு ஐந்து நிமிடமும் இறந்த பிறகு பத்து நிமிடமும் நடித்திருக்கிறார். இறந்ததுபோல நடித்தபோது பெரும் சிரமப்பட்டிருக்கிறார். அதுதான் அவருடைய முதலும் கடைசியுமான நாடக அனுபவம். ஓர் இயற்பியல் பேராசிரியருக்கு எத்தனை பெரிய லட்சியம் என நினைத்துக்கொண்டேன். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவருடைய வாழ்நாள் ஆசையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்க நான் தவறியதில்லை. அவர் ’ஒன்றுமே நடக்கவில்லை, நேரம் அமையும்போது சந்தர்ப்பம் தானாகவே என்னைத் தேடி வரும்’ என்பார்.

 

‘உண்மையாகவே உங்களை தேடி வாய்ப்பு வரும் என்று நம்புகிறீர்களா?’ என்று ஒருமுறை கேட்டேன். ’உங்களுக்கு ஒரு கதை தெரியுமா? கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் டேனே எனப்படும் கனடாவின் முதல் குடிமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பிரதான உணவு கரிபோ மான். அவை இல்லாவிட்டால் டேனே இனம் அழிந்துபோகும். 25 லட்சம் கரிபோ மான்கள் வசந்த கால தொடக்கத்தில், தெற்கிலிருந்து வடக்காகவும், இலையுதிர்காலத்தில் வடக்கிலிருந்து தெற்காகவும் குடிபெயரும்.  டேனே மக்கள்  உணவுக்காக அதன் பின்னே அலைவார்கள். அவர்கள் பட்டினியால் இறப்பதில்லை. ஒருவர் பசியில் வாடி கரிபோ மானைப் பற்றி நினைப்பாரேயானால் மான் அவரைத் தேடி வந்து அவர் பசியை நீக்கும். எங்கிருந்தோ எப்படியும் வந்துவிடும். இது ஓர் ஐதீகம். நானும் டேனே குடிமகன் போலத்தான். நான் நினைக்கும்போது என் விருப்பமும் நிறைவேறிவிடும்’ என்றார். ‘நீங்கள் நடிக்கப்போவது தமிழ்ப் படம் அல்லவா? லோகிதாசனாக நடித்தபோது இறந்துபோய்க் கிடந்ததால் வசனம் பேசும் சிரமத்திலிருந்து  தப்பிவிட்டீர்கள். ஆனால் தமிழ் படத்தில் நீண்ட நீண்ட வசனங்கள் வருமே. அவற்றை எல்லாம் மனப்பாடம் செய்யவேண்டும். எப்படிச் சமாளிப்பீர்கள்?’ என்று கேட்டேன்.

 

பேராசிரியர் அல்லவா? அத்தனை காலம் அதுபற்றி சிந்திக்காமல் இருந்திருப்பாரா? ’நீங்கள் மார்லன் பிராண்டோ நடித்த Last Tango in Paris படம் பார்த்திருப்பீர்கள். மார்லன் பிராண்டோவுக்கும் என்னுடைய பிரச்சினைதான். அவரால் வசனங்களை மனப்பாடம் செய்ய முடியாது. ஆகவே அந்தப் படம் எடுத்தபோது ஒரு யுக்தி செய்தார் எனப் படித்திருக்கிறேன். அவர் நடித்த செட் முழுக்க பேப்பர் துண்டுகளில் வசனத்தை எழுதி ஒட்டிவைத்துவிடுவார். மேசை, கதிரை, தூண் எல்லாவற்றிலும் அவர் பேசவேண்டிய வசனம் துண்டு துண்டாக ஒட்டப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் மார்லன் பிராண்டோ கண்களை உருட்டி தலையை சாய்த்து நடிப்பார்.  பார்ப்பவர்கள் அற்புதமான நடிப்பு என்று புகழ்வார்கள். உண்மையில் அவர் அவருடைய அடுத்த வசனத்தை தேடினார். பிறந்த மேனியாக நடித்த கதாநாயகியின் முதுகில் ஒரு துண்டு வசனம் எழுதி ஒட்டவேண்டும் என விரும்பினார் ஆனால் இயக்குநர் மறுத்துவிட்டார். நானும் மார்லன் பிராண்டோ வழியை பின்பற்றுவேன்’ என்றார். ஏதோ நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்கனவே கிடைத்துவிட்டதுபோல அத்தனை நம்பிக்கை அவர் பேச்சில் தெரிந்தது.

 

ஒருமுறை அவரிடம் கேட்டேன். ’இத்தனை ஆயிரம் பாடல்கள் சேகரித்து வைத்திருக்கிறீர்களே. உங்களுக்கு ஆகப் பிடித்த பாடல் எது?’ இந்தக் கேள்விக்கு ஏற்கனவே நூறுதடவை பதில் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். தயங்காமல் பாதாள பைரவி படத்தில் கண்டசாலா பாடிய ‘அமைதியில்லா என் மனமே’  என்றார். ’அதிலே என்ன தனியீர்ப்பு’ என்று கேட்டேன். அவர் சொன்னார். ‘அந்தப் பாடலை நான் முதல்தரம் கேட்டபோது இருந்த சூழ்நிலையும், மனநிலையும்தான் காரணம். அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இன்றைக்கும் பெண்வேடமிட்ட ஒரு மனிதனின் பொய்க்கால் குதிரையாட்டம் நினைவுக்கு வருகிறது. இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாத புதிர். குதிரையாட்டம்போல மனமும் ஆடுகிறது.  அற்புதமான குதிரையாட்டத்திற்கு பின்னர் அந்த மனிதன் கையை நீட்டிக்கொண்டு காசுக்கு நின்றது நினைவில் வருகிறது. சிலநாட்களில் அதிகாலையில் அந்தப் பாட;லை போடுவேன். 60, 70 தடவை விடாமல் தொடர்ந்து கேட்பேன். எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காத பாடல் அது. அந்த நாள் முழுக்க அது மனதில் ஓடியபடியே இருக்கும். குலைந்த மனதை அமைதிப் படுத்தும். அமைதியான மனத்தை குலைத்துவிடும்.’

 

இன்னும் சில மாதங்களில் அவர் ஓய்வெடுக்கப் போவதால் தனக்கு விரைவில் படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வரும் என்று சொன்னார். ’எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். டேனே குடிமக்களுக்கு பசிக்கும்போது ஒரு மான் அவர்களைத்தேடி வருவதுபோலத்தான் நான் நினைக்கும்போது அழைப்பு வரும் என்றார். தான் விரும்பிய பட்டப்படிப்பு உதவித் தொகை தன்னை தேடி வந்ததை சொன்னார். தான் விரும்பிய வேலை தன்னைத் தேடி வந்ததை சொன்னார். தான் விரும்பிய பெண் தன்னத் தேடி வந்து மணந்துகொண்டதைச் சொன்னார். அதுபோலவே இதுவும். ’அழைப்பு எப்படி வரும்? கடிதமாகவா அல்லது மின்னஞ்சலாகவா? அல்லது நேரிலே வந்து அழைப்பார்களா?’ ’இல்லை, இல்லை. தொலைபேசியில் அழைப்பு வரும்’ என்று எண்கணித சோதிடக்காரர் போல நிச்சயமாகச் சொன்னார். ’யார் அழைப்பார்கள்?’ ’பாரதிராஜா, பாலு மகேந்திரா அல்லது பாலா’ ’அது என்ன பானா வரிசை?’ ’அது அப்படித்தான். பானாவுக்கும் எனக்கும் நல்ல பொருத்தம்’ என்றார்.

 

வெகு சீக்கிரத்தில் எனக்கு செல்வேந்திரனிடமிருந்து அதிகாலை தொலைபேசி அழைப்பு ஒன்று வரும். எங்கள் உரையாடல் அப்போது இப்படிப் போகலாம்.

என்ன?

பாரதிராஜா கூப்பிட்டார். எனக்கு ஒரு வேடம் கிடைத்திருக்கிறது.

வாழ்த்துக்கள். என்ன வேடம்?

வில்லனுக்கு அப்பாவாக நடிக்கவேண்டும்.

வசனம் இருக்கிறதா?

நீண்ட நீண்ட வசனம் வரும் என்று சொல்கிறார்கள்.

எப்படி சமாளிக்கப் போகிறீர்கள். ஈழத்து தமிழ் வந்து தொலைக்கப்போகிறதே.

அது செய்யலாம். மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் எல்லாம் பேசுவேன். நீண்ட காலம் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

அப்படியா?

உச்ச கட்ட சீனில் காமிரா என் மீது ஐந்து நிமிடம் நிற்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். 

நல்லது. நல்லது.

 

செட் முழுக்க நாலு பக்கமும் துண்டு துண்டாக வசனம் எழுதி ஒட்டிவிட்டு, மெலிந்த உடல் காற்றில் அசைய, அவர் பேசுவதைக் கற்பனை செய்ய முடிந்தது. மேசையிலே ஒரு துண்டு வசனம். வில்லனின் துப்பாக்கி அடிக்கட்டையிலே ஒரு வசனம். தூணிலே கட்டிப் போட்டிருக்கும் கதாநாயகியின் வெற்று முதுகிலும் கட்டாயம் ஒரு வசனம் ஒட்டியிருக்கும்.

END 

 

 

About the author

2 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta