அபாயத்தை தேடுவோர்

""  நான் சிறுவனாயிருந்தபோது எங்கள் கிராமத்தில் ஒருவர் தட்டச்சு மெசினில் வேலை செய்வதை பார்த்திருக்கிறேன். அவருடைய விரல்கள் பரபரப்பாக இயங்கும். ஓங்கி உயர்ந்து விசைகளைத் தட்டும். அதிலே செருகியிருக்கும் பேப்பர் ஒவ்வொரு வரியாக உயரும். உருளை இடது பக்க எல்லையை அடைந்ததும் மறுபடியும் வலது பக்கம் தள்ளிவிட்டு வேகமாக அடிப்பார். ஒவ்வொரு எழுத்தும் பேப்பரில் விழுந்து வார்த்தையாக மாறும். சிலசமயம் எழுத்துக்கள் தப்பாக விழுந்து வேறு வார்த்தையாகிவிடும். அப்பொழுது அந்த எழுத்துகளுக்கு மேலே xxxxx என்று அடித்து அந்த வார்த்தையை இல்லாமலாக்கிவிடுவார். எந்தக் காரியமானாலும் ஏதாவது தப்பு ஏற்பட்டால் அதைத் திருத்துவதற்கு ஒரு வழி இருக்கும்.

 

ஆனால் சில ஆபத்தான பொழுதுபோக்கு விளையாட்டுகள் இருக்கின்றன. அவற்றிலே ஏதாவது தப்பு ஏற்பட்டால் அவற்றை திருத்துவதற்கு வாய்ப்பே கிடைக்காது. பாரசூட்டில் இருந்து குதிப்பவர் ஒரேயொரு சின்னப் பிழைவிட்டாலும் அவர் உயிர் போய்விடும். மலை ஏறுபவர் ஒரு கல்லிலே கையைப் பிடித்து தொங்கிக்கொண்டு அடுத்த கல்லுக்கு தாவுவார். அதிலே ஒரு சின்னத் தவறு அவர் உயிருக்கு ஆபத்தானதாக முடிந்துவிடும். பனிச்சறுக்கு விளையாட்டில் எட்டும் வேகம் நம்பமுடியாதது. உலக சாதனை மணிக்கு 151 மைல் வேகம். கனடாவில் இந்த வேகத்தில் கார்கூட ஓட்ட முடியாது. சட்டவிரோதம். அதி வேகத்தில் சறுக்கும் ஒருவர் சிறு தவறிழைத்தால் அதை அடுத்த சறுக்கலில் திருத்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் உயிரோடு இருக்கமாட்டார். இப்படியான பொழுதுபோக்கு விளையாட்டுகளில் மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுவது கயாக் படகு ஓட்டம்.

 

உலகத்தில் வெவ்வேறு துறைகளில் மிக ஆபத்தான சாதனைகள் செய்த உச்சமான பத்து பேரின் பெயர்களை சமீபத்தில் ஓர் அமெரிக்க பத்திரிகை வெளியிட்டிருந்தது.  அந்தப் பட்டியலில் காணப்பட்ட சில பெயர்கள்:

 

பாரசூட்டிலிருந்து குதிப்பது – லோயிக் ஜீன் அல்பெர்ட்.. இவர் 11,000 தடவை குதித்திருக்கிறார்.

பாறைகளில் ஏறுவது – லின் ஹில் என்ற பெண். இவர் பாறை ஏறுவதில் ஆண்களையும் தோற்கடித்தவர். முப்பதுக்கு மேற்பட்ட சர்வதேச விருதுகள் பெற்றவர். கயிற்றிலே தொங்கியபடி திருமணம் செய்து சாதனை படைத்தவர்.

மலை ஏறுவது – ரெயின்ஹோல்ட் மெஸ்னர். இவர் உலகத்தில் உள்ள 26,000 அடி உயரத்துக்கு மேலான 14 மலைகளையும் ஏறி வெற்றி கண்டவர்.

தென்துருவத்தை அடைவது –  ரொனால்ட் அமண்ட்ஸன் நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளைப் பயன்படுத்தி தென் துருவத்தை முதலில் கைப்பற்றியவர்.

கயாக் படகு ஓட்டம் – டக் அம்மன்ஸ்.

 

உலகத்திலே கயாக் படகு ஒட்டுவதில் அதி திறமை பெற்று முதலாம் இடத்தில் இருக்கும் (Doug Ammons) டக் அம்மன்ஸ் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். நான் கைகொடுத்தேன். நோபல் பரிசு பெற்றவர், ஒஸ்கார் பரிசு பெற்றவர், ஒலிம்பிக் தங்கம் வென்றவர் இவர்களோடு கைகுலுக்குவதற்கு எனக்குள்ள விருப்பம் சொல்ல முடியாதது. சிலருடன் கைகுலுக்கியிருக்கிறேன். சிலருடன் பேசியிருக்கிறேன். ஏழு பில்லியன் மக்கள் வாழும் இந்தப் பூமியில் ஒருவர் ஒரு துறையில் முதல் இடத்தில் இருக்கிறார் என்றால் அது எத்தனை பெரிய சாதனை.

 

டக் அம்மன்ஸ் பார்ப்பதற்கு 50 வயதுக்காரர்போல தோற்றமளித்தார். ஆனால் அவருடைய வயது அதற்கும் மேலே இருக்கலாம். அகலமான நெஞ்சுதான் முதலில் கண்ணில் படும். கைகளும் கால்களும் உறுதியாக சதை உருண்டு வலிமை மிக்கவையாகத் தெரிந்தன. கயாக் படகு ஓட்டக்காரருக்கு படகு ஓட்டத் தெரிந்தால் மட்டும் போதாது. மலை ஏறவும், நீந்தவும் தெரியவேண்டும். இரண்டு பக்கமும் செங்குத்தான மலைகளுக்கு நடுவில் ஓடும் ஆற்றில் படகில்போய் விபத்தில் மாட்டிவிட்டால் நீந்தி அல்லது மலை ஏறித்தான் தப்பமுடியும். 25 வருடங்களாக கயாக் படகு ஓட்டுகிறார். எண்ணற்ற விபத்துகளில் உடம்பில் பல எலும்புகள் முறிந்திருக்கின்றன. ஆனாலும் அவருக்கு ஆர்வம் குறைவதாயில்லை. கராத்தேயில் கறுப்பு பெல்ட் வென்றவர். கித்தார் வாசிப்பார், முனைவர் பட்டம் பெற்ற இவர் ஒரு பத்திரிகை நடத்தி நிறைய எழுதவும் செய்கிறார். இவருடைய சாதனைகளை கேட்க கேட்க ஆச்சரியம்தான் அதிகமாகும்.

 

’உங்களுக்கு என்னுடன் கயாக் படகுச் சவாரி செய்ய விருப்பமா? நான் கூட்டிப்போகிறேன்’ என்றார் டக் அம்மன்ஸ். இப்படித்தான் என் வாழ்க்கையில் ஆக அதிர்ச்சி தந்த அந்த மாலை ஆரம்பமானது. நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். பின்னர் மகளின் முகம். மகனின் முகம். அப்ஸராவின் முகம். ஒன்றிலும் பதில் எழுதியிருக்கவில்லை. நானாகத்தான் எதையாவது கண்டுபிடித்து சொல்லவேண்டும். ‘எந்த ஆறு?’ என்று கேட்டேன். இதைவிட மொக்குத்தனமான ஒரு பதில் கேள்வியை ஒருவர் உருவாக்க முடியாது. ஆற்றின் பெயரை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அதில் எத்தனை எழுத்துக்கள் என்று எண்ணிக் கூட்டிப்பார்த்து எண்கணித சோதிடப் பிரகாரம் முடிவு எடுக்கப் போகிறேனா?

 

நல்ல காலமாக அவர் Clark Fork river என்றார். அந்த ஆற்றை கண்ணால் கண்டது கிடையாது ஆனால் கேள்விப் பட்டிருக்கிறேன். அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தோமஸ் ஜெஃபர்ஸன் 200 வருடங்களுக்கு முன்னர் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசுபிக் சமுத்திரம் வரைக்கும் தரைவழிப்பாதை உண்டாக்குவதற்காக இரண்டு அனுபவப்பட்ட ஆராய்ச்சியாளர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்களுடைய பெயர்கள் லூயிஸ் மற்றும் கிளார்க். அவர் ஞாபகமாகத்தான் ஆற்றுக்கு இந்த பெயர். அதில் கொஞ்சம் உற்சாகமாகி ’ஆபத்தானதா?’ என்று கேட்டேன்.

 

ஆறுகளின் ஆபத்து நிலையை 5 பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். 5ம் நிலை மிக மிக ஆபத்தானது. திடீரென்று செங்குத்தாக தண்ணீர் விழும். நுரை எழும்பி மூடும். போகும் திசை தெரியாமல் அடுக்கடுக்காக ஆபத்துகள் வந்த படி இருக்கும். அதற்கு அடுத்த கீழ் நிலை 4; பின்னர் 3. அப்படி கடைசி நிலைதான் ஒன்று. கிளார்க்ஃபோர்க் ஆற்றின் நிலை ஒன்று. அதாவது ஆபத்து மிகமிகக் குறைவானது.

 

’அப்படியா? நிலை ஒன்றுக்கு கீழே வேறு ஆறு ஏதாவது உண்டா?’ என்றேன்.

‘இருக்கிறதே. உங்கள் வீட்டு குளியல் தொட்டியில் தண்ணீரை நிறைத்து அதற்குள் ஏறி உட்கார்ந்தால் அது முதல் நிலைக்கு கீழாக இருக்கும்.

 

’சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவர் வருவதாகச் சொல்லியிருந்தார். என்னை மூன்று பேர் தயார் செய்தார்கள். தண்ணீரில் நனையாத சப்பாத்துகள், உடைகள், கையுறை, தொப்பி எல்லாம் அணிந்து பார்க்க நான் ஆரோ மாதிரி தோற்றமளித்தேன்.  படகிலே உட்காருவதற்கு இரண்டு பள்ளங்கள் முன் பின்னாக இருந்தன. சவாரிக்கு நான் அணிந்திருந்த உடை போதுமானது என்று நினைத்தேன். போதவில்லை. ஆற்றின் கரையிலே என்னை நிற்கவைத்து மாப்பிள்ளையை சோடிப்பதுபோல டக் என்னை அலங்கரித்தார். மஞ்சள் நிற மிதவைகளை என் நெஞ்சிலே கட்டினார். பின்னர்  ரப்பரினால் செய்த அரைப்பாவாடை போன்ற ஒன்றை என் இடையிலே கட்டி என்னை கயாக்கின் பள்ளத்திலே உட்காரவைத்தார். நான் படகுக்குள் கால்களை நீட்டி அமர்ந்ததும் என்னுடைய பாவாடை விளிம்புகளை பள்ளத்தின் ஓரங்களில் சுற்றிவர இணைத்துவிட்டார். அலை அடித்தாலும் மழை பெய்தாலும் எவ்வளவுதான் நாங்கள் நனைந்தாலும் படகுக்குள் ஒரு சொட்டு நீரும் புகாது. நான் படகின் ஓர் அங்கமாக மாறியிருந்தேன். எனக்குப் பின்னால் டக் அமர்ந்து தன்னுடைய ரப்பர் பாவாடையை பள்ளத்தின் விளிம்புகளில் பொருத்திக் கொண்டார். இப்பொழுது எங்கள் உடல்கள் படகுடன் பொருத்தப்பட்டுவிட்டதால் ஓர் ஆபத்து இருந்தது. விபத்தில் படகு கவிழ்ந்தால் நாங்கள் தலைகீழாக தண்ணீருக்குள் அமிழ்ந்து மூச்சுவிட முடியாமல் போகும். அப்படியான சமயம் ஒரு கைப்பிடியை பிடித்து இழுத்தால் பாவாடை கழன்று விடுதலையாகி மேலே வந்து மிதப்போம். நான் கைப்பிடி இருக்கும் இடத்தை மனனம்செய்து மனதில் நிறுத்திக்கொண்டேன்.

 

இரண்டு துடுப்புகளில் ஒன்றை என்னிடம் தந்தார். டக் பின்னுக்கு இருந்ததால் நான் அவரை திரும்பி பார்க்க முடியாது ஆனால் அவர் சொல்வதைக் காதால் கேட்டு நிறைவேற்றலாம். ஆறு என்னை நோக்கி வரத்தொடங்கியது. அவர் இடது பக்கம் என்றால் நான் இடது பக்கம் வலிப்பேன்; வலது பக்கம் என்றால் நானும் வலது பக்கம் வலிப்பேன். இரண்டு மணிநேரப்  பயணம் என்று முன்பே சொல்லியிருந்தார். பாறைகள் வரும் இடங்களில் தண்ணீர் நுரைத்துப் பொங்கி எழும். சில இடங்களில் தண்ணீர் வேகமாக கீழே இறங்கும். வேறு இடங்களில் பழுதுபட்ட திசைகாட்டி முள்போல சுழரும்.  டக் முன்கூட்டியே எச்சரிக்கை செய்வார். ஆனால் நான் துடுப்பு போட்டது முதல் ஐந்து நிமிடம் மட்டுமே. ஆறாவது நிமிடம் ஆறு துடுப்பை பறித்துக்கொண்டு போனது. நாங்கள் அதை தேடிப் போகவில்லை. மீட்கவும் முயற்சி செய்யவில்லை. என் ஞாபகமாக இன்றைக்கும் அது எங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கும் அல்லது ஆற்றின் அடியில் கிடக்கும். மீதி நேரம் நான் ஒரு பயணிதான்.

 

டக் ஒரு திறமையான பயிற்சியாளர் என்று சொல்லலாம். கயாக் ஓட்டும் நுட்பங்களை ஒவ்வொன்றாக  சொல்லிக்கொண்டு வந்தார். எல்லா தகவல்களையும் ஒரே மூச்சில் சொல்லி என்னை திணறடிக்கவில்லை. நியூசிலாந்தில் ஒரு பறவை இருக்கிறது. அதன் பெயர் ரூயி. அது கீக் ஆ இக் என்று கத்தும். தன்குஞ்சுக்கு எப்படி கத்துவது என்பதை கற்றுக்கொடுக்கும். முதலில் கீக் கீக் என்று கத்தும். குஞ்சு அதைக்கற்றதும் அடுத்ததாக ஆ ஆ என்பதை கற்றுக்கொடுக்கும். இறுதியாக இக் இக் என்பதை சொல்லிக் கொடுக்கும். அதுபோலத்தான் டக்கும். படிப்படியாக கற்றுத் தந்தார். சில இடங்களில் பாறைகள் தண்ணீருக்கு மேலாக தெரியும். அவற்றை லாவகமாகத் தவிர்த்து ஓட்டுவார். சில தண்ணீருக்கு அடியில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும். அவற்றுடன் படகு மோதினால் கவிழ்ந்துபோகும் அபாயம். எனவே கண நேரமும் கவனம் குறையாமல் ஓட்டினார்.

 

இவருடைய உச்சபட்ச சாதனை என்றால் அது கனடாவில் பிரிட்டிஷ் சொலம்பியாவில் ஓடும் 5ம் நிலை ஸ்டிக்கீன் ஆற்றை கயாக்கில் கடந்ததுதான்.  இந்த ஓட்டம் எவரெஸ்ட் சாதனைக்கு சமன் என்று கூறுவார்கள். ஆற்றின் அகலம் 600 அடியாக இருப்பது சில இடங்களில் ஏழு அடியாகச் சுருங்கிவிடும். இருபக்கமும் செங்குத்தான மலைகள் 900 அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இந்த ஆற்றில் மிகக்கடினமான 60 மைல் தூரப் பகுதியை  கடக்க முயன்று தோற்றவர்கள் பலர். இறந்தவர்கள் அதிகம். 1990 ம் ஆண்டு டக் இந்தச் சாதனையை செய்கிறார். இரண்டுவருடம் கழித்து இன்னொருமுறை தனியாளாக கடக்கிறார். ‘மனித மனம் கற்பனை செய்யமுடியாத வேகத்தில் தண்ணீர் நுரைத்து எழும்பி மூடும். இந்தப் பூமியில் மனிதனுடைய திறமைக்கு சவலாக படைக்கப்பட்டது இந்த ஆறு’ என்கிறார் டக் அம்மன்ஸ். இன்றுவரை அந்த ஆற்றில் கயாக் ஓட்டி வெற்றிபெற்றவர்கள் 15 பேர்தான்.  

 

தண்ணீர் சுழிப்பதும் சுழலுவதும் திடீரென்று கீழே விழுவதுமாக ஆறு ஓடியது. அவருடைய திறன் உச்சத்துக்கு இந்தப் பயணத்தில் வேலையே இல்லை. ஆனாலும் பொறுமையாக ஓட்டினார். ஒவ்வொரு தடையையும் கடக்கும்போது ஆரம்பத்தில் பயமாகவிருந்தது. பின்னர் பழகிவிட்டது. ஒரு கட்டத்தில் ஆனந்தமாகக்கூட இருந்தது. இவர் கயாக் படகை ஓட்டுவதை பார்க்க அழகாக இருக்கும். ஒரு மூன்று வயதுக் குழந்தையை அணைத்துப் போவதுபோல. அந்தப் படகுக்கு அவர் ஒரு பெயர் வைத்திருந்தார். படகை யாராவது குறைத்துப் பேசினால் அவருக்கு கோபம் வந்துவிடும். அர்ச்சுனனுக்கு  காண்டீபத்தை பழி சொன்னால் அடக்கமுடியாத சினம் பொங்கிவிடும் என்று படித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.

 

நாங்கள் எங்கே திரும்பவும் கரை சேருவோம் என்பதை ஏற்கனவே சொல்லிவைத்துவிட்டுத்தான் புறப்பட்டிருந்தோம். என் மனைவி காத்துக்கொண்டு நின்றார். மூன்று மாதம் பிரிந்து போனதுபோல என்னை முற்றிலும் சோதித்து மறுபடியும் ஏற்றுக்கொண்டார். முகத்திலும் பெரிய சிரிப்புடன் அவர் நின்றபோது எனக்கு தோன்றிய முதல் எண்ணம் ’இந்தப் பெரிய சிரிப்பை தாங்கிக்கொள்ள இந்த முகம் காணாது. இன்னும் பெரிய முகம் ஒன்றுக்கு ஓடர் பண்ணவேணும்’ என்பதுதான். நான் நெஞ்சிலே அணிந்திருந்த மிதவைகளையும் மற்றும் ரப்பர் பாவாடையையும் கழற்றி டக்கிடம் ஒப்படைத்தேன். ஒற்றைக் கையால் படகை தூக்கி தோளிலே சுமந்துகொண்டு யேசு சிலுவையை காவியதுபோல தரையை பார்த்தவாறு தன் வாகனத்தை நோக்கி அவர் நடந்து போனார். எனக்கு என்னவோ செய்தது. ஒரு பிரயோசனம் இல்லாத என்னுடன் நாலுமணி நேரம் செலவழித்திருந்தார். ’இந்த அன்பை எப்படி அவருக்கு திருப்பி கொடுப்பேன்’ என்று நினைத்தேன்.

 

டக் அம்மன்ஸ் அபூர்வமான மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை. கடவுள் இத்தனை அற்புதங்களைப் படைத்திருப்பது மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று சொல்கிறார். ’ஒவ்வொரு கணமும் உயிர்போய்விடும் என்ற நிலையில் மனதின் குவிப்பு சக்தி அபாரமானது. நாள் முடியும்போது என்னை அது ஒருபடி மேலே நல்ல மனிதனாக மாற்றுகிறது. வாழ்க்கையின் பொருள் பற்றி நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது. வெளியே பயணம் செய்யும் அதே சமயம் ஆத்மாவுக்குள்ளும் ஒரு பயணம் நிகழ்கிறது. உங்கள் சிந்தனை கூராகிறது. அதற்காகத்தான் என் மனம் மறுபடி மறுபடி கயாக் பயணத்துக்காக ஏங்குகிறது’ என்றார்.  

 

ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார். ‘ஐயா, உங்கள் சாதனை பிரமிக்க வைக்கிறது. உலகத்தில் முன்பு ஒருவரும் செய்ய முடியாத சாதனையை செய்திருக்கிறீர்கள். உங்கள் உணர்வு அப்போ எப்படியிருந்தது?’ இதுதான் கேள்வி. டக் அம்மன்ஸ் கூறிய பதிலில் அவருடைய தன்னடக்கமும், எளிமையும், வாழ்க்கை தத்துவமும் அடங்கியிருக்கிறது. ‘என்னிலும் சாதனை படைத்தவர்கள் உலகில் எத்தனையோபேர் உள்ளனர். என்னுடைய சாதனை உலகத்து வறுமையை நீக்காது. கான்சர் நோயை குணப்படுத்தாது. உலக மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழி செய்யுமோ என்றால் அதுவும் இல்லை.’

 

நான் ரொறொன்ரோ வந்து சேர்ந்ததும் முதலில் ஒரு நண்பர் விசயத்தை எப்படியோ கேள்விப்பட்டு கயாக் படகு ஓட்டம் பற்றி விசாரித்தார். அதன் பின்னர்தான் மற்றவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கின.

‘நண்பர் சொன்னார், நான் நம்பவில்லை. நீங்கள் கயாக் படகில் போனீர்களாமே?

‘எந்த ஆற்றில் போனீர்கள்? உண்மையாகவே கயாக் சவாரி ஆபத்தானதா?’

‘’  Doug Ammons ஆ? கயாக் ஓட்டத்தில் அவர் உலகின் number one அல்லவா? 

   அவருடனா போனீர்கள்?   

   இவர்கள் எல்லோருக்கும் என்னிடம் பதில் இருந்தது. ஒரே பதில்.

‘  ‘ஆமாம், டக் அம்மன்ஸ் என்னுடன்தான் வந்தார்.’

   END

 

 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta