வரலாறு கவனிக்கவேண்டிய சந்திப்பு

""சில நாட்கள் ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் பிழைக்கும். என்ன செய்தாலும் பிழையான ஒன்றுதான் நடக்கும். தேவிபாரதியுடனான சந்திப்பு அந்த வகையைச் சேரும். சந்திப்புக்கு நாலு பேர் சேர்ந்து போவதாகத் தீர்மானித்தோம். செல்வம், வரன், டானியல் ஜீவா மற்றும் நான். இந்த நால்வரில் தேவிபாரதியுடன் முகப் பழக்கம் கொண்டவர் செல்வம்தான். என்னுடைய பழக்கம் மின்னஞ்சலோடு நின்றது. மற்ற இருவருக்கும் அதுவும் இல்லை.

 

தேவிபாரதி நியுயோர்க்கில் நடைபெறும் ஓர் எழுத்தாளர் பட்டறையில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து வந்திருந்தார். அவர் ஒரு மாதம் நிற்பார் என்றார்கள், ஆனால் அவரைச் சந்திப்பதென்றால் நாங்கள் பத்து மணி நேரம் பயணம் செய்து நியூயோர்க்குக்கு போகவேண்டும். அல்லது அவர் கனடிய விசா எடுத்து எங்களைக் காண ரொறொன்ரோ வரவேண்டும். தேவிபாரதி இந்தியா திரும்புவதற்கு முன்னர் நயாகரா அருவியை பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தார். கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையில் நீர்வீழ்ச்சி இருந்தது. அதை அமெரிக்கா பக்கத்தில் இருந்து பார்க்கலாம். கனடாவிலிருந்தும் பார்க்கலாம். அவர் அமெரிக்க நீர்வீழ்ச்சியை காண அமெரிக்க எல்லைக்கு ஓர் இரவு வருவார். நாங்கள் அந்த நேரம் சந்தித்தால் வசதியாக இருக்கும்.

 

கனடா எல்லையை கடந்து அமெரிக்கா சென்று அவரைப் பார்ப்பது என்பது முடிவு. எடுத்தவுடன் அப்படி மனைவியிடம் உண்மையை உடைக்கக் கூடாது என்பது உலகத்தில் உள்ள எல்லாக் கணவர்களுக்கும் தெரியும். ‘எங்கே புறப்படுகிறீர்கள்?’ என்றார் மனைவி. ‘சும்மா ஒரு நண்பரைப் பார்க்க?’ ‘சரி, நேரம் கடத்தாமல் வாருங்கள். யார் அந்த நண்பர்?’ ‘இந்தியாவிலிருந்து வந்திருக்கும் புகழ்பெற்ற எழுத்தாளர். நீரும் வாரும்’ என்றேன். ஓர் எழுத்தாளரைப் பார்ப்பதற்கு 1000 டொலர் கையிலே கொடுத்தாலும் வரமாட்டார் என்பது எனக்கு தெரியும். ‘அப்படியா? எப்ப திரும்புவீர்கள்?’ ‘எப்படியும் 10 மணிக்கு திரும்பிவிடுவேன். எனக்கு காத்திருக்கவேண்டாம். நீர் சாப்பிடும்.’ நாங்கள் இப்படி பேசியபோது பகல் இரண்டு மணி. ‘பத்துமணியா? எங்கே சந்திக்கிறீர்கள்?’ ‘நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்க அவர் வருவார். அங்கே சந்திக்கிறோம்.’ எந்த நீர்வீழ்ச்சி என்பதை அவர் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை.

 

நான் ஞாபகமாக கொண்டு போகவேண்டிய சாமான்களை அடுக்கினேன். மனைவி  சிற்றுண்டி வகைகளும், போத்தல் தண்ணீரும் எடுத்து வைத்தார். ஆனால் நான் பாஸ்போர்ட் எடுத்து வைத்ததை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். ‘எதற்கு பாஸ்போர்ட்?’ என்றார். ‘இல்லை, சிலவேளை அவர் கனடாப் பக்க நயாகராவுக்கு வரமுடியாவிட்டால் நாங்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்து அவரைப் பார்ப்போம்’ என்றேன். முகத்தை ஆமையின் முகம்போல வைத்துக்கொண்டேன். அதிலே ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது. என்னை ஊடுருவிப் பார்த்தார். ’சரி, வீட்டுத் திறப்பை ஞாபகமாக  எடுத்து வையுங்கள். நான் தூங்கிவிடுவேன். மறக்க வேண்டாம்’ என்றார். நான் கண் மூடித் திறப்பதற்குள் சாவியை எடுத்து பையில் போட்டுக்கொண்டேன்.

 

வாகனத்தை ஓட்டுவதற்கு வரன் தேர்வு செய்யப்பட்டார். எங்கள் வேலை வாகனத்தின் எடையைக் கூட்டுவது ஒன்றுதான். இந்தப் பயணத்தில் ஒரேயொரு பிரச்சினை. தேவிபாரதிதான் எங்களை அழைக்கலாம்; நாங்கள் அவரை அழைக்கமுடியாது. காரணம் அவரிடம் செல்போன் இல்லை. நயாகரா வந்த பிறகு பொதுத் தொலைபேசியிலோ, வேறு யாருடையவோ இரவல் தொலைபேசியிலோ எங்களை அழைத்து தான் இருக்கும் இடத்தைச் சொல்வார். நாங்கள் அங்கு போய் அவரை சந்திப்போம். அதன் பிரகாரம் நாங்கள் கனடா எல்லையில் வந்து காத்து நின்றோம். ஐந்து மணிக்கு அவர் அழைப்பதாக ஏற்பாடு ஆனால் ஐந்து மணி வந்து போய்விட்டது. அழைப்பு வரவில்லை. அமெரிக்காவுக்குள் நுழைந்து அவரை நயாகராவில் தேடுவோம் என முடிவு செய்தோம்.

 

அமெரிக்க குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டுகளை கொடுத்தோம். அவர் கூண்டு மிருகங்களைப் பார்ப்பதுபோல எங்களைக் கூர்ந்து பார்த்தார். ’எத்தனை நாள் தங்கப் போகிறீர்கள்?’ நாங்கள் ’இரண்டு மணி நேரம்தான். அமெரிக்க நயாகராவை பார்த்துவிட்டு உடனேயே திரும்பிவிடுவோம்’ என்றோம். வாகனத்தின்  கதவை திறந்து ஒவ்வொருவர் முகத்தையும் கடவுச்சீட்டு முகத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தார். பின்னர் நாங்கள் ஆயுத வியாபாரிகள் இல்லை, பயங்கரவாதிகள் இல்லை, போதைபொருள் கடத்தல்காரர்கள் இல்லை, கொலைக்கு தேடப்படுபவர்கள் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் அனுமதி தந்தார். நாங்கள் நாலுபேரும் எழுத்தாளர்கள் என்பது தெரிந்திருந்தால் அவருடைய முடிவு என்னவாகியிருக்குமோ தெரியாது.  

 

தேவிபாரதியை காணவில்லை, ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சி சும்மாயிருந்தது. எனவே அதைப் பார்த்தோம். கனடா நீர்வீழ்ச்சியுடன் ஒப்பிட்டபோது சின்னதாயிருந்தது; சரிபாதிகூட இல்லை. ஆகக் கிட்டத்தில் இருந்து பார்க்கக்கூடியதாக இருந்ததால் தடுப்புக் கம்பியை தாண்டி குதித்தால் தண்ணீரை தொட்டுவிடலாம். கனடா நீர்வீழ்ச்சியை ’குதிரை லாடம்’ என வர்ணிப்பார்கள். அமெரிக்க  நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு வெண்கூந்தல் பெண் முடியை சீவி விரித்ததுபோல இருந்தது. தண்ணீர் எழும்பி வெண்நுரையாக மாறி விழும் அழகு மறக்கக்கூடிய காட்சி இல்லை. அதை வர்ணிப்பது தாஜ்மஹாலை தபால்தலையில் பார்த்துவிட்டு இந்தியாவை கற்பனை செய்வதுபோலத்தான். இன்னொன்று, கனடா நயாகரா நீர்வீழ்ச்சியின் சத்தம் ஓவென்று இரைச்சலாகக் கேட்கும். அதன் பக்கத்தில் நின்று ஒருவரோடு ஒருவர் பேசமுடியாது. பெரிய கிரிக்கட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் சிக்ஸர் அடித்தால் எப்படி சத்தம் எழுமோ அப்படி தொடர்ந்து கேட்கும். ஆனால் அமெரிக்க பகுதி சுதா ரகுநாதன், நித்தியசிறீ, அருணா சாய்ராம் எல்லோரும் சேர்ந்து ’ப’ ஸ்வரத்தை தொடர்ந்து பாடுவதுபோல அமைதியை தருவதுடன் மனதுக்கு இனம் விளங்காத மகிழ்ச்சியை கொடுத்தது. தற்காலிகமாக தேவிபாரதியை மறக்கவும் செய்தது. அந்த சூழ்நிலையும் அழகும் போதாது என்பதுபோல பாதியாக வெட்டிய சந்திரன் மேலே தொங்கியது.

 

தேவிபாரதியும் அங்கேதான் எங்கேயோ நின்றார். இரண்டு குழுவாகப் பிரிந்து அவரை தேடத் தொடங்கினோம். எப்படி அடையாளம் காண்பது என்றார் வரன். தொலைத்ததை தேடுவதுபோல ஒருவர் தோன்றுவார், அவர்தான் என்றார் இன்னொருவர். தேவிபாரதிக்கு தெரிந்தது செல்வத்தின் செல்பேசி எண் மட்டுமே. கனடா செல்பேசிகளுக்கு ஒரு திறமை உண்டு. அமெரிக்க எல்லைக்குள் நிழைந்ததை எப்படியோ கண்டுபிடித்து சிலசமயம் வேலைசெய்ய மறுத்துவிடும். ஒருவேளை தேவிபாரதி அழைத்து செல்பேசி மணி அடிக்காமல் அவர் திரும்பிவிட்டாரோ எனவும் நினைத்தோம். அவர் நியூயோர்க் மாநிலத்தில் கெண்ட் என்ற இடத்திலிருந்து ரயில் ஏறி பஃவலோ ஸ்டேசனில் இறங்கி நயாகராவுக்கு வருவதுதான் திட்டம்.  ஸ்டேசனிலேயே எங்களை எதிர்பார்த்து தங்கிவிட்டரோ என்றும் தெரியவில்லை. இரண்டு மணிநேரம் இப்படி ஓடிவிட்டது. நாலு தடவை மைதானத்தை சுற்றிவிட்டோம். இனி முடியாது என்ற நிலை. குறுந்தொகையில் ஒரு பாடல் உண்டு, வெள்ளிவீதியார் எங்களுக்கென்று பாடியதுபோல. ‘கால்கள் அலுத்தன, கண்கள் தேடித்தேடி மங்கின. வானத்து நட்சத்திரங்களையும் விட அதிகமாக இருந்தனர், மற்றவர்கள்.’ ஐந்தாவது தடவை சுற்றுவதா திரும்பி கனடாவுக்கு போவதா என்று முடிவெடுக்க முடியாமல் திணறியபோது செல்வத்தின் ஃபோன் கிணுங் கிணுங் என்று இனிமையாக ஒலித்தது. அழைத்தது தேவிபாரதிதான்.

 

நானும் செல்வமும் தேவிபாரதி குறிப்பிட்ட இடத்துக்கு புறப்பட்டோம். மற்ற இருவரும் வேறு பக்கத்தில் இன்னும் தேடிக்கொண்டிருந்தார்கள். ஏழு மணி தாண்டிவிட்டதால் நிழல் மறையும் நேரம். வெள்ளைக்கார உருவங்கள் கூட அன்று தேவிபாரதியாகவே தெரிந்தன. ஒரு பத்து நிமிடநேரம் அலைந்திருப்போம். பொத்தான் பூட்டாத சாம்பல் நிற கோட்டு இரண்டு பக்கமும் விசிற, நீள்சதுர கண்ணாடி அணிந்த மெலிந்த உருவம் ஒன்று வேகமாக நடந்தது. தொலைந்ததை தேடும் நடை இல்லை. விட்டதை பிடிக்க ஓடும் நடை. கையிலே டென்னிஸ் விளையாட்டுக்காரர்கள் காவுவதுபோல நீளமான பை. அது தேவிபாரதியாக இருக்கலாம். நான் அவரைப் படத்தில் பார்த்தது மட்டுமே. கைகளைத் தூக்கி ஆட்டினேன். அவரும் ஆட்டினார். ‘Dr.Livingstone, I presume’ என்று 140 வருடங்களுக்கு முன்னர் ஸ்டான்லி ஆப்பிரிக்கக் காட்டில் சொன்னதுபோல நானும் ’தேவிபாரதி, அப்படித்தானே?’ என்று கேட்டேன். சரித்திரப் பிரசித்திபெற்ற அந்தச் சந்திப்பு 50 மைல் கூட்டுத்தொகை வேகத்தில்  நிகழ்ந்தது. நயாகரா ஓசை பஞ்சமத்தில் சூழ, காற்று வீச, அமெரிக்க சந்திரன் ஒளி தர கட்டிப்பிடித்துக்கொண்டோம்.

 

முதலில் தேநீர்  அருந்தினோம். இரண்டு மணிநேரமாக அவரும் அங்கேதான் சுழன்றுகொண்டிருந்தார். பலமுறை எங்கள் பாதைகள் ஒன்றை ஒன்று வெட்டிச் சென்றிருக்கலாம். அவரிடம் செல்பேசி இல்லை. அவர் பொதுத்தொலைபேசி கூண்டு ஒன்றைத் தேடி அலைந்திருக்கிறார். செல்பேசிகள் வந்த பிறகு பொது தொலைபேசிகளுக்கு என்ன வேலை என்று அவைகள் அகற்றப்பட்டுவிட்டன. சிலரிடம் செல்பேசியை கடன் கேட்டிருக்கிறார். கேட்டவர்கள் எல்லோருமே இந்திய முகம் கொண்டவர்கள். அவர்கள் உதவவில்லை. இறுதியில் ஒரு ஹொட்டலில் நுழைந்து அங்கேயிருந்து எங்களை அழைத்திருக்கிறார். தேவிபாரதி ஒரு தொலைபேசியை தேடிப்பிடிக்க இரண்டு மணிநேரம் எடுத்திருந்தாலும் அவர் அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றிலும் பழகிவிட்டார். இன்னும் ஒரு மாதம் தங்கியிருந்தாரானால் எங்களுக்கு கனடா திரும்பிப் போவதற்கு குறுக்குப் பாதை ஒன்று சொல்லித் தந்திருப்பார்.

 

இன்னும் பிரச்சினை முடிந்தபாடில்லை. தொலைந்துபோன இரண்டு நண்பர்களையும் தேடத் தொடங்கினோம். இருவரிடமும் செல்பேசி இருந்தது ஆகவே பிரச்சினை இருக்க முடியாது. ஆனால் வரன் தன் செல்பேசியை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு வந்திருந்தார். புத்திஜீவிகள் அப்படித்தான் செய்வார்கள் என்று நல்ல புத்தகம் சொன்னது. டானியல் ஜீவா ஒரு கடுமையான கொள்கை வைத்திருந்தார். நான் நாலுதடவை செல்பேசியில் அழைத்தேன். செல்வம் ஐந்து தடவை அழைத்தார். பதில் இல்லை.  பத்துக்கு மேல்தரம் டெலிபோனில் ஒருவர் அழைத்தால்தான் டானியல் ஜீவா செல்பேசியை வெளியே எடுப்பார். இது பின்னர்தான் எங்களுக்கு தெரிய வந்தது. நாங்கள் ஐந்துபேரும் ஒன்று சேர்ந்தபோது இரவு மணி பத்தாகிவிட்டது. நான் வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவேன் என்று மனைவிக்கு சொன்ன நேரம்.

 

ஆறுதலாக அமர்ந்து பேசுவதற்கு வசதியாக உணவகம் ஒன்றைத் தேடினோம். தேவிபாரதியும் நாங்களும் கூட்டாக 800 மைல் தூரம் பயணம்செய்து வந்து சந்தித்திருக்கிறோம். வீட்டுக்கு எடுத்துப் போவதற்கு ஏதாவது பேசவேண்டும் அல்லவா? தேவிபாரதி மிகவும் உற்சாகமாக இருந்தார். நீண்டநாட்களுக்கு பிறகு அவருக்கு தமிழ் பேச வாய்ப்பு கிடைத்திருந்தது. தேவிபாரதி  இரவு உணவைச் சாப்பிட்டபடி பேசத்தொடங்கினார். எழுத்தாளர் பட்டறைக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். மிகவும் பயனுள்ள பட்டறை. அதைப்பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதப் போவதாகச் சொன்னார். அத்துடன் இந்த இடைப்பட்ட காலத்தில் தான் ஒரு நாவல் எழுதி முடித்துவிட்டதாகக் கூறி எங்களை திகைக்க வைத்தார்.  

 

’அவர் எப்படி எழுத்து துறைக்கு வந்தார்?’ என்று கேட்டேன். அவருக்கு ஆதர்சம் என ஒருவரும் இல்லை. தானாகவே பயிற்சி எடுத்து முன்னுக்கு வந்தவர். அவருடைய சிறுகதைகள் சில என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. தேவிபாரதி ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்தார். அவர் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக வர்ணித்தார். இவற்றையெல்லாம் அவர் தன் சுயசரிதை நூலில் ஏற்கனவே எழுதிவிட்டதால் ஒன்றிரண்டை மாத்திரம் இங்கே பதிவு செய்கின்றேன். மீதியை அவருடைய புத்தகம் வெளியாகும்போது படித்து தெரிந்து கொள்ளலாம்.

 

‘என்னுடைய தாத்தா பெயர் குமரப்ப பண்டிதர். எங்கள் வம்சாவளியில் முதன்முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர் அவர்தான். தாத்தாவின் அப்பா பெயர் வீரப்பன். அவர் பழையக்கோட்டை ஜமீன்தார் அரண்மனை நாவிதராக பணியாற்றினார். ஜமீன்தாரின் மகளை சங்கரண்டாம்பாளையம் ஜமீனுக்கு கட்டிக் கொடுத்திருந்தார்கள்.  மகளுக்கு பொங்கல் சீர் தந்தை வீட்டிலிருந்து கொடுத்து அனுப்பவேண்டியது அந்தக் கால வழக்கம். அப்பொழுதெல்லாம் ரோட்டுகள் இல்லை; தூரம் 50 மைல் இருக்கும். நாவிதர்கள்தான் தலையில் சீர் காவவேண்டும். தாத்தாவின் தலையில் ஈர நாரினால் கட்டப்பட்ட விறகுச்சுமை இருந்தது. பாதி வழியில் நார் வெய்யிலுக்கு முறுகி அறுந்து விறகு கட்டைகள் சிதறிவிட்டன. அதை திருப்பி கட்டவேண்டுமென்றால் முறுகி அறுந்த நாரை மறுபடியும் தண்ணீரில் நனைக்கவேண்டும். அந்த வறண்ட பிரதேசத்தில் தண்ணீருக்கு எங்கே போவது. விறகு கட்டைகளை அப்படியே போட்டுவிட்டு காட்டுக்குள் ஓடி தப்பி சித்தர்களுடன் சேர்ந்து எழுதப் படிக்கவும், ஜோதிடம் கணிக்கவும் கற்றுக்கொண்டார். என்னுடைய தாத்தா பின்னர் பள்ளி ஆசிரியர் ஆனார். அவருடைய முன்னுதாரணமும் ஊக்குவிப்பும்தான் என்னை எழுத்து துறைக்கு இட்டு வந்தன.’ 

 

இவரிடம் சொந்தமாக பல காதல் கதைகள் இருந்தன. அவற்றையெல்லாம் சொன்னார். ஒரு கதை சுவாரஸ்யமானது. இவர் ஒரு பெண்ணைக் காதலித்தார். ஆனால் அந்தப் பெண் அவரைக் காதலித்தாரா என்பதை கடைசிவரை அறியமுடியவில்லை. இவருக்கு மணமான பின்னர் ஒருநாள் மனவியுடன் முன்னாள் காதலியின் வீட்டுக்கு சென்றார். காதலிக்கு இவருக்கு மணமானது தெரியாது. உள்ளே போய் யாரோ இவர் வந்திருப்பதாகக் கூறினார்கள். இவருடைய காதலி ‘ஐக்’ என்று சத்தமிட்டபடி ஓடி வந்து வெளியே பார்த்தபோது இவர் மனைவியுடன் நின்றார். காதலியின் முகம் வாடிவிட்டது. அந்தப் பெண் தன்னைக் காதலித்தாள் என்ற விசயம் அவருக்கு மணமுடித்த பின்னர்தான் தெரிய வருகிறது. இப்படிப் பல கதைகள் பேசினோம். இன்னும் நிறைய கதைப்பதற்கு இருந்தது, ஆனால் நேரம் ஓடியது. அவர்  மறுபடியும் நயாகராவை சுற்றிப் பார்த்துவிட்டு ரயில் ஏறப்போவதாகச் சொன்னார். நாங்கள் விடை பெற்றுக்கொண்டு திரும்பினோம்.

 

மைகேல் ஒண்டாச்சி தன் புத்தகத்தில் சொல்கிறார், டத்தூரா என்று ஒரு வெள்ளைப்பூ இருக்கிறதாம். அதைப் பறிக்கும்போது சிரித்தால் அன்று முழுக்க சிரிப்பார்களாம். அழுதால் நாள் முழுவதும் அழுகைதானாம். நாங்கள் அப்படி ஒரு பூவை பிரச்சினை இருக்கும்போது பறித்தோமோ, என்னவோ. பிரச்சினை முடியாத நாளாக அது இருந்தது. கனடா தொடங்கும் இடத்தை வந்து அடைந்தபோது பிரச்சினை மறுபடியும் முளைத்தது. கனடா எங்கள் நாடு; படுத்திருந்த வீட்டு நாய் தலைதூக்கிப் பார்ப்பது போல அந்த வெள்ளைக்கார மாது, குடிவரவு அதிகாரி, மேசையிலிருந்த தலையை உயர்த்திப் பார்த்தார். எங்களை இன்முகத்துடன் வரவேற்பார் என்று நினைத்தோம். நடு இரவில் ஒரு வாகனத்தில் நாலு ஆண்கள் திரும்பியது அவருக்கு பிடிக்கவில்லை. ’எதற்காக அமெரிக்கா போனீர்கள்?’ என்று கேட்டார். நாங்கள் அமெரிக்க பக்க நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு போன உண்மையை சொன்னோம். அது பாதி உண்மைதான். நாங்கள் போனது ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளரைச் சந்திப்பதற்கு. ‘எத்தனை மணி நேரம் பார்த்தீர்கள்?’ இது என்ன கேள்வி. நாங்கள் எத்தனை மணி நேரமும் நீர்வீழ்ச்சியை பார்க்கலாம். நீர் கொட்டுவது நிற்கும்வரைகூட பார்க்கலாம். அப்படிச் சொல்லவில்லை.  முகத்தை ஆட்டுக்குட்டியின் முகம்போல வைத்துக்கொண்டு ‘நாலுமணி நேரம்’ என்றோம். ‘ஒரு நீர்வீழ்ச்சியை பார்க்க நாலுமணி நேரமா?’ ‘ஆளுக்கு ஒவ்வொரு மணித்தியாலமாகப் பார்த்தோம்.’ அந்தப் பெண் கோபத்தை பல்லினால் கடித்துக்கொண்டு. இடது கையை நீட்டி அந்தப் பக்கம் போகச் சொல்லி சைகையில் காட்டினார். பின்னர் வேலைக் களைப்பில் தூங்கப் போய்விட்டார்.

 

இரண்டு திடகாத்திரமான ஆண்கள் சீருடையில் வந்தார்கள். வாகனத்தை விட்டு இறங்கச் சொன்னார்கள். ஒருவர் எங்களை தனித்தனியாக விசாரிக்க ஆரம்பித்தார். மற்றவர் வாகனத்தை உதிரிப்பாகமாக விற்கப் புறப்பட்டவர் போல ஒவ்வொரு பகுதியாக பிரிக்கத் தொடங்கினார். ஆசனங்களை கழற்றி திருப்பி போட்டார். என்ஜின் மூடியை தூக்கி ஆராய்ந்தார். வாகனத்தின் கீழே குனிந்து பார்த்தார். பின்பகுதியை திறந்து சோதித்தார். வாகனத்தின் உள்புறத்துக்குள் பிரகாசமான ஒளியை பாய்ச்சி எதையோ தேடினார். மறுபடியும் அதே கேள்விகள். எதற்காக போனீர்கள். மறுபடியும் அதே பதில். கனடா நீர்வீழ்ச்சியை பார்த்தீர்களா? இல்லை. (அதை ஏற்கனவே நூறுதடவை பார்த்துவிட்டோம். அன்று பார்க்கவில்லை.) அதிகாரிக்கு புரிபடாத விசயம் என்னவென்றால் நாலு ஆண்கள், நடுச்சாமம் கனடா நீர்வீழ்ச்சியை பார்க்காமல் அமெரிக்காவுள் நுழைந்து அங்கே நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்புவது. ஏதாவது ஆயுதம் இருக்கிறதா? இல்லை. போதைப்பொருள். இல்லை. எவ்வளவு பணம் கொண்டு வருகிறீர்கள்? பத்தாயிரம் டொலர்களுக்குமேல் காசாக எடுத்துக்கொண்டு வரமுடியாது. சட்ட விரோதம். நாங்கள் எங்களிடமிருந்த கூட்டுத்தொகை பணத்தை சொன்னபோது எங்களுக்கு வெட்கம் வந்துவிட்டது. கேட்ட அதிகாரிக்கு இன்னும் கூடுதலான வெட்கம். வேண்டா வெறுப்பாக எங்களுக்கு விடை கொடுத்தார். நாங்கள் நாலு தலைசிறந்த எழுத்தாளர்கள் கனடாவுக்குள் நுழைந்தோம். இத்தனை அவலத்திலும் ஓர் ஆதாயம் இருந்தது. இரண்டு வருடத்துக்கு முன்னர் செல்வம் தொலைத்துவிட்ட ஒரு புத்தகத்தை அதிகாரிகள் வாகனத்தின் ஆசனத்துக்கு கீழ் கண்டுபிடித்து கொடுத்தார்கள்.  

 

நான் வீடு வந்து சேர்ந்தபோது இரவு இரண்டு மணி. எத்தனைபேர் தங்கள் வீடுகளை இரவு இரண்டு மணிக்கு பார்த்திருக்கிறார்கள்? எங்கள் வீட்டு வீதி இவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் இருந்து நான் கண்டதில்லை. வீதியிலே யாரோ பால் ஊற்றிவிட்டதுபோல வெள்ளையாக பளிச்சென்று இருந்தது. வீட்டுக்கு முன் இருந்த பூங்காவில் மரங்களின் இலைகள் பொன்னிறமாக மாறிவிட்டன. நயாகராவில் பார்த்த அதே சந்திரன் இங்கேயும் வந்து ஒளிவீசினான். வேட்டைக்கு போய்த் திரும்பும் பழங்காலத்து அரசனின் மனம்போல என் மனமும் வெற்றியிலும், மகிழ்ச்சியிலும் ததும்பியது.  

 

கால்சட்டைப் பையில் இருந்து திறப்பை எடுத்து வீட்டுக் கதவை திறக்க முயன்றேன். முடியவில்லை. என் வீட்டு திறப்பு. என் வீட்டு கதவு. எவ்வளவு முயன்றும் இயலவில்லை. துவாரத்துக்குள் சாவி நுழைவதற்கே மறுத்தது. டத்தூரா பூ தன் வேலையை இன்னும் தொடர்ந்ததால் பிரச்சினை முடியவில்லை. எந்த ஒரு வீட்டுக் கதவையும் கார் திறப்பு திறக்காது. புறப்படும் அவசரத்தில் தவறான சாவியை பையிலே எடுத்துப் போயிருக்கிறேன். என்வீட்டுக் கதவுக்கு முன் நின்றேன். அங்கே பஃவலோ ஸ்டேசனில் இந்தநேரம் தேவிபாரதியும் தனியாக நின்றுகொண்டிருப்பார். அல்லது டென்னிஸ்காரர்களின் நீளப் பையை தூக்கியபடி நயாகராவில் சுழன்றுகொண்டிருப்பார். அவருடைய ரயில் மூன்று மணிக்கு வரும். அவர் கெண்ட் ஸ்டேசனுக்கு போய்ச் சேர காலை பத்து மணியாகும்.

 

வீட்டு அழைப்பு மணியை அடித்தேன். உள்ளே ஒரு சத்தமும் இல்லை. மறுபடி மறுபடி அழைத்தேன். எவ்வளவு விரல் அழுத்தத்தை கூட்டினாலும் மணியின் சத்த அளவு கூடவில்லை. கைகளினால் கதவை ஓங்கி ஓங்கித் தட்டத் தொடங்கினேன். நம்பிக்கை தளர்ந்த நேரம் உள்ளே காலடியோசை கேட்டது. அமெரிக்க நயாகராவின் ‘ப’ ஸ்வர ஓசைகூட அவ்வளவு மகிழ்ச்சியை எனக்குள் எழுப்பவில்லை.

END

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta