இப்பொழுது நாங்கள் ஐவர்

இப்பொழுது நாங்கள் ஐவர்

அ.முத்துலிங்கம்

டேவிட் செடாரிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளரை பல தடவை சந்தித்திருக்கிறேன். அவர் பற்றி எழுதியும் இருக்கிறேன். அவருடைய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை. அவருடைய டைரிக் குறிப்புகள்தான். அவர் எழுதியவற்றை ஒரு தொகுப்பாக இப்பொழுது வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த புத்தகத்தின் பெயர் Theft by Finding. தமிழில் ’கண்டெடுத்த திருட்டு’ என்று சொல்லலாம்.   ஒரு பொருளை கண்டெடுத்தாலும் அது உங்களுடையது அல்ல, இங்கிலாந்தின் சட்டப்படி அது திருட்டுத்தான்.

ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் அவர் உலகத்தின் பல நகரங்களுக்கு  புத்தக சுற்றுலாவில் செல்வார். ஓர் இரவு மட்டுமே அந்த நகரத்தில் தங்கிவிட்டு அடுத்த நாள் விமானம் ஏறி வேறு நகரத்துக்கு சென்றுவிடுவார். ரொறொன்ரோ சுற்றுலாவுக்கு வரும்போது அவர் கூட்டங்களுக்கு சென்று அங்கே கூடும்  வாசகர் தொகையைக் கண்டு நான் பிரமித்திருக்கிறேன். ஒரு நாள்  அவரிடம்  எப்படி உங்களுக்கு எழுதுவதற்கு  புதுப்புது விதமான கருக்கள் கிடைக்கின்றன என்று கேட்டேன். ’நான் பயணம் செய்யும் போதும், நூதனமான  ஆட்களைச் சந்திக்கும் போதும் ஏதாவது தோன்றும். அல்லது எனக்கு புதுவிதமான அனுபம் ஏற்படும்போதும் எழுதுவதற்கு கரு கிடைக்கும். அப்படி ஒன்றும் தோன்றாவிட்டால் என்னுடைய பழைய டைரிகளை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன். 1977ல் இருந்து நான் டைரிக் குறிப்புகள் எழுதி வருகிறான். டைரியை எழுதும்போது தோன்றாத ஒன்று பலவருடங்கள் கழித்து படிக்கும் போது வரும். உடனே எழுதுவேன். இதுவரை என் டைரி என்னை கைவிட்டதில்லை என்றார்.

பல எழுத்தாளர்கள் தொடர்ந்து டைரி எழுதுகிறார்கள். இது எழுத்தாளருக்கு நல்ல பயிற்சி என்றும் சொல்வார்கள். ஆனால் இவருடைய டைரி கொஞ்சம் வித்தியாசமானது. இவருடைய டைரியில் உள்நோக்கிய குறிப்புகள் இல்லை; அநேகமாக எல்லாமே வெளிநோக்கியவை. இவர் தன்னைப் பற்றியோ, தன் உணர்வுகளைப் பற்றியோ எழுதுவதில்லை. தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியே குறிப்புகள் இருக்கும். தான் கண்ட அபூர்வமான காட்சி, விநோதமான சம்பாசணை, கேள்விப்பட்ட நகைச்சுவை துணுக்கு, தொலைபேசி மிரட்டல்கள், வாசகர் கடிதங்கள் என்று டைரியை நிறைத்திருக்கும். அதுதான் ’கண்டெடுத்த திருட்டு’ என்று புத்தகத்துக்கு  தலைப்பு வைத்ததன் காரணமாக இருக்கலாம். இந்தக் குறிப்புகளை ஊடுருவிப் படித்து இவர் வாழ்க்கையை ஒருவாறு ஊகிக்கலாம். நேரடியாக தன் வாழ்க்கையை இவர் பேசவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் ரொறொன்ரோவில் மைக்கெல் ரெட்ஹில் என்பவருக்கு கில்லர் பரிசு கிடைத்தது. கனடாவில் வழங்கப்படும் ஆகச் சிறந்த இலக்கிய விருது. இவர் 100,000 டொலர் பரிசுப் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு அந்த ரசீதை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அவருடைய புதிய வங்கிக் கணக்கு 100,411 ஆக உயர்ந்திருந்தது. அதாவது அவரிடம் வங்கியில் இருந்த பணம் வெறும் 411 டொலர்கள்தான். பரிசுப் பணத்தை என்ன செய்வார் என்று கேட்டபோது வீடு வாங்கப்போவதாகவோ, கார் வாங்கப் போவதாகவோ அவர் சொல்லவில்லை. கடன்களை அடைக்கப் போகிறார்.

தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமில்லை, உலகில் உள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை இதுதான். டேவிட் செடாரிஸ் அனுபவித்த வறுமையையும், சிறுமையையும் விவரிக்கமுடியாது. டைரியில் சில இடங்களை இப்போது படிக்கும்போது நம்பமுடியாமல் இருக்கிறது.  வாழ்க்கை குறிப்புகளை 21 வயதில் இருந்து எழுதுகிறார். அவர் தன்னைப்பற்றி எழுதியது குறைவு. வேறு சம்பவங்கள் மூலம் அவர் வாழ்க்கையை ஊகிக்க முடிகிறது. இவர் போதைப்பொருள் அடிமை. அத்துடன் ஓரினச் சேர்க்கையாளர். படிப்பை தொடராமல் பாதியில் விட்டவர். அவர் ரோட்டிலே போகும்போது கல்லால் அடிப்பார்கள். போத்தலை வீசுவார்கள். ஓரினச் சேர்க்கையாளரை ஏற்றுக்கொள்ளாத காலகட்டம் அது. வீட்டிலே இருந்து வெளியேறிவிட்டதால் எந்நேரமும் பணத்துக்கு தட்டுப்பாடு. அவர் தங்கியிருந்தது ஒரு சின்னஞ்சிறிய அறை. அதை இப்படி வர்ணிக்கிறார். ‘கிழக்குப் பக்கம் இரண்டடி வைத்ததும் அறை முடிந்துவிடும். வடக்குப் பக்கம் இரண்டடி வைத்ததும் அறை முடிந்துவிடும்.’ அறை வாடகையை கட்டமுடியாமல் திண்டாடுகிறார். வீட்டுச் சொந்தக்காரர் அவரை வெளியேற்றப் போவதாக அச்சுறுத்தியபடியே  இருக்கிறார். இவருடைய தொலைபேசியை அடிக்கடி வெட்டிவிடுகிறார்கள். இவர் போய் மன்றாடுவார். பழைய சைக்கிள் ஒன்றில் ஓடுவார். அடிக்கடி அதன் கைப்பிடி கழன்று கையோடு வந்துவிடும். ஆரம்பகாலங்களில் இப்படியான குறிப்புகள்தான் அதிகம்.

இவருடைய குடும்பம் ஒற்றுமையானது போலவே தோற்றமளிக்கும். ஆனால் நிறையச் சண்டைகள். வருடத்தில் ஒருமுறை விடுமுறை நாளில் ஒன்றுகூடுவார்கள். தகப்பன் கண்டிப்புக்காரர். பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்வதை அவர் நிறுத்தவே இல்லை. பிள்ளைகளும் அவர் சொல்வதை உதாசீனப்படுத்துவதை நிறுத்தவில்லை. இவருடன் சேர்த்து குடும்பத்தில் ஆறு பிள்ளைகள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசும் விசயங்கள் அதிர்ச்சியளிக்கும். இவர் பிற்காலத்தில் தன் நண்பனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்னர் இவருடைய அக்கா இவரை ஒரு கேள்வி கேட்டார். ஓர் அக்காவும் தம்பியும் இப்படியா பேசுவார்கள் என்று அதிர்ச்சி தரும். ‘நீ உன் நண்பனுடன் வாரத்துக்கு எத்தனை தடவை உடலுறவு வைப்பாய்?’ அதற்கு இவர் பதில் சொல்கிறார். என்ன சொன்னார் என்பது குறிக்கப்படவில்லை.

இவர் செய்யாத வேலையே கிடையாது. வீடுகளுக்கு வர்ணம் பூசுவது இவர் தொடர்ந்து செய்த வேலை. துப்புரவுப்பணியும் இவர் விரும்பிச் செய்த ஒன்று. உணவகங்களில் கோப்பை கழுவுவதும் அடிக்கடி நடக்கும். ஒருமுறை வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. ஆகவே ஓர் ஓவியக் கல்விக்கூடத்தில்  model  ஆக வேலைசெய்கிறார். ஆனாலும் ’நான் என் உடுப்புகளை முற்றாகக் கழற்றவில்லை’ என்று டைரியில் எழுதிவைக்கிறார்.  இவர் செய்த வேலைகளில் இவரால் மறக்க முடியாதது ஜேட் என்று சொல்லப்படும் பச்சை மணிக்கல்லை மினுக்கியது. இவருடைய இமைகள், காது ஓட்டைகள், மூக்குத்துவாரங்கள் எல்லாமே பச்சை நிறமாக மாறிவிட்டன. ஆர்ஜெண்டினா அதிபர் ஜெனரல் பெரோன் தன் மனைவி ஏவா ஞாபகமாக சிலை செய்வதற்கு 15 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட ஜேட் கல்லை வாங்கினார். அந்தக் கல்லை எப்படியோ இவருடைய முதலாளி அவரிடம் 100,000 டொலர்கள் கொடுத்து வாங்கிவிட்டார்.  அதைத்தான் இவர் இரவு பகலாக மினுக்கினார். அந்தக் கடினமான வேலைக்கு இவருக்கு கிடைத்த ஊதியம் வெறும் 14 டொலர்கள்தான்.

இவருக்கும்  தாயாருக்கும் இடையே இருந்த உறவுகூட வித்தியாசமானதுதான். ஒரு முறை தாயாரின் பிறந்த நாளின்போது அவருக்கு பரிசு கொடுக்க இவரிடம் ஒன்றுமே இல்லை. தாயார் சொன்னார், ’நீ எனக்கு பத்து டொலர் கடன் தரவேண்டுமல்லவா? அதை நீ தரத் தேவையில்லை. அதுவே உன் பரிசு.’  இவரை காரிலே ஏற்றிக்கொண்டு தாயார் ஓர் இடத்துக்கு செல்கிறார். அடிக்கடி தொலைந்து போகிறார்கள். தாயார் தன் மகனிடம் சொல்கிறார், ‘பார், அடிக்கடி வழி தவறுகிறது. இன்று மது அருந்தாததால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது.’ ஒருநாள் இவர் அறையிலே பட்டினியாக கிடக்கிறார். சமைக்க ஒன்றுமில்லை. அந்த நேரம் தாயார் ஒரு கூடை நிறைய மளிகைச் சாமான்களுடன் அவரைப் பார்க்க வருகிறார். அப்படி அன்பை தாயார் அவரிடம் செலுத்தியதே கிடையாது. எப்படி தாயாருக்கு நன்றி கூறுவது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கிறார்.

அவருடைய 27வது வயதில் புத்தி மாறி படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. சிகாகோவில் உள்ள கலைக்கூடம் ஒன்றில் படிக்க இடம் கிடைக்கிறது. இந்த நாலு வருடங்கள் அவர் வாழ்க்கையில் முக்கியமானவை. எதிர்காலத்துக்கு அவரை தயாராக்குகின்றன. அந்த காலகட்டத்தில் நடந்தவற்றை சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறார். அவருடைய அறை மிகச் சிறியது. அதை இப்படி விளக்குகிறார். ’இந்த அறையை குளிர் காலத்தில் வெப்பமாக்குவது பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஒரு மெழுகுதிரியை கொளுத்தி வைத்தால் போதும், அறை சூடாகிவிடும். இங்கே உடுப்புகளை ஸ்திரி செய்வதற்கு ஒடுங்கிய மேசை ஒன்று உண்டு. அதையே உணவு மேசையாகவும் பாவிக்கலாம்.’

பல விதமான சின்னச் சின்ன அனுபவங்களை அன்றாடம் எழுதுகிறார்.  ஒருநாள் இவர் ரயில் வண்டியை பிடிப்பதற்கு வேகமாக ஓடுகிறார். ரயிலை நெருங்கினாலும் அதை பிடிக்க முடியவில்லை. பக்கத்தில் நின்றவர் ‘நீங்கள் ரயிலை தவற விட்டுவிட்டீர்கள்’ என்கிறார். இவர் ’ஆமாம்’ என்கிறார். அவர் தொடர்ந்து பணம் தரச்சொல்லி இவரை தொந்திரவு செய்கிறார். ‘நான் ஏன் பணம் தரவேண்டும்?’ ’நான் உங்களுக்கு உதவிசெய்தேனே. நீங்கள் எனக்கு உதவமுடியாதா?’ ‘நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்?’ ‘செய்தேனே. நீங்கள் ரயிலை தவறவிட்டதை உங்களுக்குச் சொன்னேனே.’

இவருடைய கடைசித் தங்கை ரிஃவானிக்கும் இவருக்கும் இடையில் நடக்கும் சம்பாசணைகள் சுவாரஸ்யமானவை. அடிக்கடி சண்டையிடுவார்கள். ஒருவருடன் ஒருவர் பேசாமல் சில காலம் செல்லும். பின்னர் பேசி சிநேகமாவார்கள். ரிஃவானி 14 வயதில் வீட்டைவிட்டு ஓடி பின்னர் பிடிபட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் படித்தவர். மாணவியாக இருந்தபோதே கர்ப்பமாகிவிட்டார். சிசு கர்ப்பப்பை வாசலில் உண்டாகிவிட்டதால் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள்.  குணமானபோது ரிஃவானி மருத்துவரிடம் கேட்ட முதல் கேள்வி ‘நான் எப்போது மீண்டும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்?’

1985ல் அவருடைய 29வது வயதில் ஒரு மாற்றம் வருகிறது. வகுப்பு பேராசிரியர் மாணவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களில்  ஒன்றை கதையாக  எழுதிவரவேண்டும் எனச் சொல்கிறார். இவர் இரவிரவாக உட்கார்ந்து எழுதுகிறார். வீட்டுக்கு வர்ணம் பூசுவது போல எழுத்து திட்டு திட்டாக வருகிறது. ஒரு மூலையில் வர்ணம் பூசிவிட்டு அடுத்த மூலைக்கு ஓடுவதுபோல தொடர்ச்சி இல்லாமல்தான் எழுதமுடிகிறது. ஆனாலும் விடாமல் எழுதுகிறார். ஒரு பிடிப்பு வருகிறது. தனக்குள் எழுத்து திறமை இருப்பதையும், அதில் சொல்லமுடியாத ஓர்  ஆர்வம் உண்டாவதையும் அவர் கண்டுபிடிக்கிறார்.

இரண்டு வருடங்கள் கழித்து, அவர் பட்டதாரியான பின்னரும்  தொடர்ந்து கூலிவேலையே செய்கிறார். ஒருநாள் முதலாளியைப் பார்ப்பதற்காக மின்தூக்கியில் ஏறுகிறார். கவலாளி அவரைத் தடுத்து கண்டபாட்டுக்கு வைகிறான். கூலிக்காரர்கள் பின்னுக்கு சாமான்கள் கொண்டுபோகும் மின்தூக்கியில்தான் ஏறவேண்டும் என்று அவரை துரத்துகிறான். அவருக்கு அவமானமாகப் போய்விட்டது. பட்டதாரியாக இருந்தால் மட்டும் போதாது மதிப்பான வேலை வேண்டும் என்று நினைக்கிறார். ’நான் ஏன் உயிர் வாழவேண்டும்?’ என்று காரணங்களை பட்டியல் இடுகிறார். அதில் ’என் பெயரை அச்சில் பார்க்க வேண்டும். என் கதைகள் பிரசுரமாக வேண்டும்’ என எழுதி வைக்கிறார்.

அவர் மனதுக்குள் என்ன ஓடியதோ தெரியவில்லை. பட்டியல் போட்ட பின்னர் அவருடைய சிறுகதை ஒன்று வெளியாகிறது. அதைத் தொடர்ந்து வேலையும் கிடைக்கிறது. கல்லூரியில் புனைவு இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர் வேலை. வகுப்பிலே எட்டுப் பேர்தான். உற்சாகமாகப் படிப்பிக்க ஆரம்பிக்கிறார். அவர் மாணவர்களுக்கு கொடுத்த முதல் வீட்டுப் பாடம் இதுதான். ’நான் என்னுடைய காலை எப்படி இழந்தேன்?’ இந்த தலைப்பில் கட்டுரை எழுதவேண்டும். மாணவருடைய  எழுத்துத் திறமையையும்,  கற்பனை பெருக்கத்தையும் ஒரே கட்டுரையில் அளந்துவிடலாம் என்பது அவர் கணிப்பு.

இந்தக் காலகடத்தில் அவர் மூன்று சம்பவங்களை பதிவுசெய்கிறார்.  ஒன்று சோகமானது. மற்றது விளையாட்டுத் தனமானது. மூன்றாவது அதிர்ச்சி தரக்கூடியது. அவர் வீட்டுக்குப் போகிறார். அங்கே அவரை எல்லோரும் சந்தேகத்துடனேயே நடத்துகிறார்கள். அவர் தொட்டெடுத்த பொருளை மற்றவர் தொடுவதில்லை. அவர் பாவித்த கிளாசை மற்றவர் பயன்படுத்தப் பயந்தனர். அவருக்கு எய்ட்ஸ் இருக்கக்கூடும் என குடும்ப அங்கத்தினர் சந்தேகப்பட்டதன் விளைவுதான் இத்தனை கெடுபிடிகள் என்பதை அவர் உணர்ந்து கொள்கிறார். கவலையுடன் தன் அறைக்குத் திரும்புகிறார்.

இவருடைய விளையாட்டுத்தனத்தை அடுத்த பதிவு காட்டுகிறது. இவருடைய தங்கை ரிஃவ்வானி ஒரு தபால்காரரை காதலிக்கிறார். இதை அறிந்ததும் செடாரிஸ் தன் தங்கைக்கு விதம் விதமான  தபால் அட்டைகளை எழுதி குறும்பு செய்கிறார்.  தபால்காரர் அவற்றை படித்து அதிர்ச்சியடையவேண்டும்  என்பதுதான் காரணம். ’மருத்துவர் இன்று உறுதியாகச் சொல்லிவிட்டார். உனக்கு வந்தது positive தான்.’ ’நீ கடன் வாங்கிய 10,000 டொலர்களை  எப்போ திருப்பித் தருவாய்?’ தபால்காரர் தங்கையை விட்டுவிட்டு ஓடினாரா என்ற தகவலை அவர் எழுதவில்லை.

மூன்றாவது அதிர்ச்சியானது. வகுப்பு கடைசி நாள் இவர் மாணவர்களிடம் ஒன்று சொல்கிறார். அவரிடம் கைக்கடிகாரம் இல்லை.  மாணவர்களிடம் அன்றைய வகுப்பு முடியும்போது இப்படிச் சொல்கிறார். ’இன்று கடைசி நாள். மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு ஏதாவது பரிசு தருவது வழக்கம். உங்களுக்கு பிரியமானால், இந்தக் கடையில், இன்ன கடிகாரம் 140 டொலர் விலைக்கு விற்கிறது. உங்களுக்கு பிரியமானால், நீங்கள் அதை வாங்கி எனக்கு பரிசாகத் தரலாம்.’ கடிகாரம் அவருக்கு கிடைத்ததா என்பது மர்மமாகவே இருக்கிறது.

1990ம் ஆண்டு பல மாற்றங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்கின்றன. அவர் நியூ யோர்க் நகருக்கு வேலைதேடி வருகிறார். அங்கே முதன்முதலாக  மீதி வாழ்நாள் முழுக்க அவருடன் வாழப்போகும் ஹியூ என்ற நண்பரைச் சந்திக்கிறார். இருவரும் ஒன்றாக இணைந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். பல நல்ல காரியங்கள் இந்த நட்பில் கிடைக்கின்றன. போதைப்பொருள் பாவிப்பதை நிறுத்துகிறார். மது அருந்துவதையும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறார். ஆனால் எந்த வேலையில் சேர்ந்தாலும் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. மேசையில் உட்கார்ந்து அவரால் வேலை செய்யவே முடியாது. ஒருமுறை மேலதிகாரி இவரிடம் வருமான வரிப் பத்திரத்தை கொடுத்து நிரப்பச் சொல்கிறார். பாதியில்  25ல் 81/4 % எவ்வளவு என்று கணக்கீடு செய்யத் தெரியவில்லை. வருமானவரி அதிகாரியையே தொலைபேசியில் தொடர்புகொண்டு அதற்கு விடை கேட்கிறார். அவரோ ’இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை’ என்கிறார்.

இவருடைய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. ரேடியோவில் இவரை நேர்காணல் செய்கிறார்கள். அதன் பின்னர் நாலு இடங்களுக்குப் போய் தன் துப்புரவுப் பணியை முடித்துவிட்டு தன் அறைக்குத் திரும்புகிறார். அவரால் நம்பமுடியவில்லை. தொலைபேசியில் பாராட்டுகள் வந்து குவிகின்றன.  அவருடைய தொலைபேசி உள்பெட்டியில் தகவல்கள் நிரம்பி புதுதகவல்களுக்கு இடமில்லாமல் ஆகிறது.  தன்னில் ஏதோ தனித்தன்மை இருக்கிறது. தனக்குத் தெரியாத திறமை ஒன்று தன்னிடம் இருக்கிறது என்ற  எண்ணம் வருகிறது.

பாரிஸ் சென்று பிரெஞ்சு மொழி கற்கவேண்டும் என்ற ஆசை திடீரென்று பிறக்கிறது. பாரிஸில் இவருடைய ஆசிரியை கண்டிப்பானவர். இவருடைய பிரெஞ்ச் உச்சரிப்பை திருத்துவதே அவர் பொழுதுபோக்கு. ஆசிரியைக்கு இவரைப் பிடிக்காது.  இவரோ அவரைச் சீண்டியபடியே இருப்பார். ஒருநாள் ஆசிரியை இவரை ஒரு கட்டுரை பிரெஞ்சு மொழியில் எழுதிக்கொண்டு வரச் சொல்கிறார். எதிர்காலத்தில் செல்வச்செழிப்புடன் அவர் சுகமாக வாழப்போகும் ஒரு வாழ்க்கை பற்றி அவர் எழுதவேண்டும். இவர் பிரெஞ்சு மொழியில் இப்படி எழுதி ஆசிரியைக்கு சமர்ப்பிக்கிறார்.

‘நான் கிழவனாகி, தோல் சுருங்கி, பல் இல்லாமல் முதியோர் இல்லத்தில் வாழ்வேன். இரவு மூன்று தடவை தாதியின் உதவியுடன் கழிவறைக்கு போவேன். கஞ்சி குடிப்பேன். மாதம் ஒரு முறை குளிப்பேன். என்னை ஒருவரும் வந்து பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சவப்பெட்டிகளினுள் இருப்பார்கள். நான் கூரையைப் பார்த்து சலித்துப்போய் படுத்திருப்பேன். பக்கத்து அறையில் என்னுடைய பழைய பிரெஞ்சு ஆசிரியை சுவரில் சோக் கட்டிகளை எறிந்தபடி பொழுதைப் போக்குவார். நான் கத்துவேன், ‘நிறுத்து. போதும் எறிவதை நிறுத்து.’ அவர் என் உச்சரிப்பை திருத்துவார்.’

பாரிஸில் இருந்தபோது சிலந்தி வளர்க்க ஆரம்பிக்கிறார். அவருடைய சிலந்திக்கு பெயர் கிளிவ்டன். ஒருநாள் இரண்டு ஈக்களும், ஒரு விட்டிலும் உணவாகப் பிடித்து அதற்குக் கொடுக்கிறார். சிலந்தி ஈக்களை தின்று முடிக்க ஆறுமணிநேரம் ஆகிறது. இரையைக் கண்டதும் சிலந்தி  பாய்ந்து வந்து கடிக்கும். அவை மயக்கமாகிவிடும். பின்னர் சாவதானமாக இரையை உறிஞ்சிக்  குடித்துவிடும். வெறும் கோதுதான் மிஞ்சும். ஒரேயொரு பிரச்சினை, தினம் ஈக்களை பிடிப்பதுதான். ஆனால் பாரிஸ் போன்ற ஒரு நகரில் அவற்றின் எண்ணிக்கைக்கு குறைவே இல்லை.

இவர் தன் அப்பாவுடன் சுமுகமான உறவு பேணியதில்லை. இவரை தொலைக்காட்சியில்  லெட்டர்மன் ஒருமுறை நேர்காணல் செய்தார். லெட்டர்மனால் நேர்காணல் செய்யப்படுவது பெருமதிப்பான விசயம்.  அமெரிக்க ஜனாதிபதி, வெளிநாட்டுத் தலைவர்கள்,  அதிமேதாவிகள்  ஆகியோரை அவர் நேர்காணல் செய்பவர். நேர்காணலை டிவியில்  பார்த்துவிட்டு இவருடைய தகப்பனார் தொலைபேசியில் இவரை அழைத்து திட்டினார். ’உனக்கு ஆளுமை கிடையாது. என்ன சப்பாத்து? என்ன உடை? நான் வாங்கித்தந்த டையை கட்டியிருக்கலாமே.’ டேவிட் டைரியில் இப்படி எழுதுகிறார் ‘என் அப்பா சப்பாத்தும், டையும் ஒருவர் சொல்வதை மேம்படுத்தும்; சாதாரண வார்த்தைகளை உயரிய இலக்கியமாக  மாற்றிவிடும் என நம்புகிறார்.’

அவருடைய புத்தகம் Me Talk Pretty One Day  வெளிவந்து  அமோகமாக விற்றுத் தள்ளுகிறது. புத்தகங்களில் கையொப்பம் இடுவதற்காக இவர் நகரம் நகரமாக செல்கிறார். ஒஹையோ நகரத்தில் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார். ‘என்னை விமான நிலையத்தில் மர்லின் என்பவர் வந்து சந்தித்து அழைத்துச் செல்கிறார். நான் புத்தக அரங்கத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகப் போகலாம் என்று சொன்னேன். அவர் தேவையில்லை என்று சொல்லி 15 நிமிடம் இருக்கும்போது அழைத்துப் போகிறார். கார் தரிக்கும் இடம் நிரம்பி விட்டதால் சுற்றிச் சுற்றி வந்து சிரமப்பட்டு ஓர் இடத்தை கண்டுபிடித்து காரை நிற்பாட்டினோம். ’யாரோ இங்கே பெரிய விருந்து இன்று கொடுக்கிறார்கள் போல’ என்றார் மர்லின். பேசுவதற்கு முன்னர் 15 நிமிடமும், பேசிய பின்னர் மூன்று மணிநேரமும் வாசகர்களுடைய புத்தகங்களில் கையொப்பமிட்டேன். திரும்பும்போது மர்லின் சொன்னார் ‘இவ்வளவு சனங்களும் இங்கே தற்செயலாகக் கூடியது நல்லதாகப் போய்விட்டது.’ கடைசிவரை அந்தப் பெண்ணுக்கு தெரியாது அத்தனை மக்களும் அங்கே அன்று கூடியது டேவிட் செடாரிஸ் என்ற எழுத்தாளரை சந்திப்பதற்காக என்று.

மிக நல்ல செய்தியுடன் டைரிக் குறிப்புகள்  முடிவுக்கு வருகின்றன. இவருடைய புத்தகம் நியூ யோர்க் டைம்ஸ் வெளியிடும் ஆகச் சிறந்த புத்தகங்கள் பட்டியலில் தொடர்ந்து ஒரு வருடம் இடம் பிடிக்கிறது. இவருக்கு அந்தச் செய்தி பிரமிப்பு ஏற்படுத்துகிறது. 52 வாரங்களா? அவரால் நம்ப முடியவில்லை. உடனே வேறு ஒரு சிந்தனையும் தோன்றுகிறது. ஒரு விருந்துக்குச் சென்று அங்கே அளவுக்கதிகமான நேரம் தங்கிவிட்டது போல ஒரு குற்றவுணர்வு. ‘என்னிலும் சிறந்த எழுத்தாளர் ஒருவருடைய இடத்தை பிடித்துவிட்டோமோ’ என்ற மன உறுத்தல் அவரை வாட்டுகிறது. அங்கேதான் உண்மையான டேவிட் செடாரிஸ் வெளிப்படுகிறார்.

ஆரம்பத்தில் 3 டொலர் கூலியாக  வேலை பார்த்தவர் படித்து படிப்படியாக முன்னேறி இன்று மிகப் பிரபலமான ஓர் எழுத்தாளராக உலகை வலம் வருகிறார். இன்றுவரை ஒற்றை விரலால்தான் டைப்செய்கிறார். அவர் கனடா வரும்போது நான் அவரைச் சந்திப்பேன். இலவச டிக்கட்டை எனக்கு முதலிலேயே அனுப்பிவைப்பார். 2000 பேர் அமர்ந்திருக்கும் சபையில் ஒரு மணிநேரம் பேசுவார். பின்னர் மூன்று அல்லது நாலு மணிநேரம் நின்றுகொண்டே கையெழுத்திடுவார். பிரபலமான பின்னரும் அவர் ஒரேமாதிரித்தான் இருக்கிறார். ஒரு மாற்றமும் தெரியவில்லை.

ஆரம்பத்தில் கையினால் எழுதி அவரிடமிருந்து கடிதங்கள் வந்தன. பின்னர் தட்டச்சு செய்து அனுப்பினார். நான் அவரிடம் கம்புயூட்டரில் எழுதுவது உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். அவர் கேட்கவில்லை. திடீரென்று 2003ல் கம்புயூட்டரில் எழுத ஆரம்பித்துவிட்டார். இதற்கு காரணம் அவருடைய நண்பர் ஹியூ என்றே நினைக்கிறேன்.

அவருடைய கடைசித் தங்கை ரிஃவான் பற்றிய பதிவுகள் டைரியில் இருக்கின்றன. குப்பைத் தொட்டியில் மற்றவர்கள் வீசிய வான்கோழி இறைச்சியை ரொஃவான் சாப்பிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.  அத்தனை வறுமை.  2013 மே 14 டேவிட் செடாரிஸை ரொறொன்ரோவில் சந்தித்தபோது அவர் தங்கை பற்றி பேசினார். அப்படி நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோதே ரிஃவானி இறந்திருக்கக்கூடும். தற்கொலை செய்திருக்கிறார். பல நாட்கள் தள்ளி, கதவை உடைத்து  அவர் உடலை கண்டுபிடித்தார்கள். சில வாரங்கள் கழித்து செடாரிஸ்  தன்னுடைய தங்கையின் நினைவுகளைப் பகிர்ந்து நியூயோர்க்கரில் ஒரு கட்டுரை எழுதினார். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுதான் கட்டுரையின் அடிநாதம். அவருடைய குடும்பத்தில் ஆறு பேர். நாலு பெண்கள், இரண்டு ஆண்கள். கட்டுரையின் தலைப்பு ’இப்பொழுது நாங்கள் ஐவர்.’ கட்டுரையில் சோகமாக ஒன்றுமே சொல்லப்படவில்லை. அது முடியும்போது மனம் பாரமாகிவிடும்.

25 வருடத்து டைரிக் குறிப்புகள் புத்தகமாக வந்துவிட்டது. மீதி 15 வருட குறிப்புகள் 2018ல் வரலாம். ஓர் எழுத்தாளரின் சாதாரண டைரி இத்தனை புகழ் பெற்றது ஆச்சரியம்தான். ’அடுத்து உங்கள் கடிதங்களை புத்தகமாக வெளியிடுங்கள்’ என எழுதியிருக்கிறேன். கடிதங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை. அப்படி வரும்பொழுது அவர் எனக்கு எழுதிய கடிதங்களும் இடம்பெறும் என நினைக்கிறேன். நிச்சயம் அவை வித்தியாசமானவையாக இருக்கும்.

END

 

 

 

 

 

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta