அடுத்த ஞாயிறு

               அடுத்த ஞாயிறு

               அ.முத்துலிங்கம்

வைத்திலிங்கம் சமையல்கட்டுக்குள் நுழைந்தார். தையல்நாயகி திடுக்கிட்டுப்போய் எழுந்து நின்றார். அவர் கணவன் சமையல்கட்டுக்குள் வருவதே கிடையாது. மணமுடித்த கடந்த 15 வருடங்களில் இது இரண்டாவது முறையாக இருக்கலாம். தையல்நாயகிக்கு முன்னால் பெரிய கடகத்தில் மாங்காய்கள் பெரிசும் சிறிதுமாக பல அளவுகளில் கிடந்தன. அவற்றை ஊறுகாய்க்காக வெட்டிக்கொண்டிருந்தார். முதல் நாள் அடித்த புயல்காற்றில் அத்தனை மாங்காய்களும் நிலத்திலே விழுந்துவிட்டன. அவற்றை மீட்டு பயனாக்கும் வேலையில் இருந்தார். கைகளை சேலையில் துடைத்தபடி என்ன என்பதுபோல கணவரின் முகத்தைப் பார்த்தார்.

’மறந்துவிட்டீரா? இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை’ என்றார் வைத்திலிங்கம். அவர் குரலில் ஏதோ சொல்லத் தயங்குவது தெரிந்தது. ‘இன்னும் கொஞ்ச மாங்காய் இருக்கு. முடித்துவிட்டுக் கிளம்பலாம்’ என்றார் தையல்நாயகி. ’இன்றைக்கு ஓர் அரைமணிநேரம் முந்திப் போகலாம் என்று நினைக்கிறேன்.’

’அதற்கென்ன? பொங்கல் ஏற்கனவே செய்து வைத்திருக்கிறேன். வாழைப்பழமும் வெற்றிலையும் தட்டத்திலே இருக்கு. நாங்கள் முந்திப் போனால் சாமி எங்களைப் பார்ப்பாரா?’

’அதிலே ஒன்றும் சங்கடம் இல்லை. பிள்ளைகள் எங்கே?’

’அவை அம்மா வீட்டிலை இருக்கினம்.’

’சரி நான் வெளியிலே இருக்கிறன்’ என்று சொல்லிவிட்டு வைத்திலிங்கம் வெளிக்குந்திலே போய் உட்கார்ந்து மனைவிக்காக காத்திருந்தார்.

வைத்திலிங்கம் அங்கவஸ்திரத்தை உதறி தோளிலே முறுக்கி போட்டுக்கொண்டு முன்னே போக தையல்நாயகி சற்று பின்னே நடந்தார். அவர் தாம்பாளத்தை தோள்மூட்டடியில் நிமிர்த்தி பக்குவமாகப் பிடித்தபடி நடந்துவந்தார். தோய்த்து காயவைத்த பச்சை நிறப் பருத்தி புடவையை. அணிந்திருந்தார். சாமிக்கு ஆடம்பரம் பிடிக்காது. ஒவ்வொரு ஞாயிறும் அவர்கள் சாமியை பார்க்கப் போவார்கள். இன்றைக்கு கொஞ்சம் முன்னதாகப் போகும் காரணம் மனைவிக்கு தெரியவில்லை. கணவர் ஏதாவது செய்தால் அதில் நியாயம் இருக்கும்.

ஓலையால் செய்த படலையை கொஞ்சம் தூக்கி நகர்த்திக்கொண்டு உள்ளே போனார்கள். ஒரு துண்டு மட்டும் கட்டிக்கொண்டு சாமி உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி நாலு பேர். சாமி ஏதோ சொல்ல அவர்கள் சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சாமி ’ஆர், வைத்திலிங்கமே வா வா’ என்றார் சாமி. அவர்களை உட்காரச் சொல்லவில்லை. ’வாழைப்பழத்தை எடு.’  வைத்திலிங்கம் எடுத்து நீட்டினார்.

’உரி.’

வாழைப்பழத்தை உரித்தார். ‘சரி சாப்பிடு.’

வைத்திலிங்கம் வாழைப்பழத்தை கையிலே பிடித்துக்கொண்டு இரண்டு பக்கமும் பார்த்தார். பின்னர் ஒரு மெல்லிய கடி கடித்தார்.

’என்ன கடி இது. முழுவதையும் விழுங்கு.’

முழுப்பழத்தையும் வாய்க்குள் நுழைத்தார். அது பெரிய வாழைப்பழம். நுழைக்கவும் முடியாது. கடிக்கவும் முடியாது. விழுங்கவும் முடியாது. துப்பலாம் என்றால் அதுவும் முடியவில்லை.

‘விழுங்கு’ சாமி கத்தினார்.

வைத்திலிங்கம் விழுங்கினார். வாழைப்பழம் தொண்டை வழியாக உள்ளே இறங்குவது தெரிந்தது. ஒரு மைல் தூரம் ஓடி வந்ததுபோல அவருக்கு வியர்த்தது.

’சரி. போ, போ. இன்றைக்கு திருச்சி வானொலியிலே பட்டம்மாளின் கச்சேரி. கெதியாய் போய்க்கேள்’ என்று சாமி துரத்தினார்.

அவர் மனைவியை பார்த்தார். பின் இருவரும் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். வைத்திலிங்கத்துக்கு யோசனையாய் இருந்தது. மனைவிக்கு கூட அவர் பட்டம்மாள் கச்சேரி பற்றிச் சொல்லவில்லை. வீட்டுக்கு வந்ததும் தையல்நாயகி சேலையை மாற்றிவிட்டு சமையல்கட்டுக்குள் நுழைந்து மீதி மாங்காயை வெட்டத் துடங்கினார். வைத்திலிங்கம் ரேடியோ பெட்டியை திருகி திருச்சி வானொலி நிலையத்துக்கு வைத்தார்.

அடுத்த ஞாயிறு மனைவியையும் கூட்டிக்கொண்டு சரியான நேரத்துக்கு சாமியிடம் போனார். சாமி பிரசாதத்தை எடுத்துக்கொண்டார். அங்கே கூட்டம் ஏற்கனவே கூடியிருந்தது. சிறிது நேரம் இருந்து சாமி பேசியதைக் கேட்டுவிட்டு புறப்படும்போது சாமி வினவினார். ’வைத்திலிங்கம். உனக்கு இரண்டு பிள்ளைகள்தானே?’ ’இல்லை சாமி. மூன்று பிள்ளைகள்.’

‘சரி. சரி. போய்வா. அடுத்த ஞாயிறு வரவேண்டாம்.’

அன்று இரவு வைத்திலிங்கத்தின் கடைசி மகளுக்கு திடீரென்றுய் தாங்க முடியாத தலையிடியுடன் காய்ச்சல் தொடங்கியது. மகளுக்கு 6 வயதுதான். பரியாரி வந்து பார்த்து மருந்து கொடுத்தார். மூன்று நாளில் சிறுமி இறந்துவிட்டார். 

ஒரு மாதம் கழிந்தது. வைத்திலிங்கம் மனைவியுடன் சாமியிடம் வந்தார், சிறிது நேரம் வழக்கம்போல இருந்துவிட்டு புறப்பட்டார்கள். சாமி அவர்களை மறித்துக் கேட்டார்.

‘வைத்திலிங்கம் உனக்கு இரண்டு பிள்ளைகள்தானே?’

‘ஓம் சாமி.’

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta